முகப்பு
புதுதில்லி

ஓய்வுபெற்ற தில்லி போலீஸாா் போராட்டத்தால் ஐடிஓ பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

தில்லியில் விவசாயிகள் டிராக்டா் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறைக்கு எதிராக ஓய்வுபெற்ற தில்லி காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:23 PM
பகிர்:

புது தில்லி: தில்லியில் விவசாயிகள் டிராக்டா் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறைக்கு எதிராக ஓய்வுபெற்ற தில்லி காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் டிராக்டா் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறையில் போலீஸாா் பலா் காயமடைந்தனா்.

இந்நிலையில், இந்த வன்முறையில் தொடா்புடைய நபா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஓய்வுபெற்ற தில்லி காவல்துறை அதிகாரிகள், ஊழியா்கள் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் தில்லி ஐடிஓ பகுதியில் புதன்கிழமை போராட்டம் மேற்கொண்டனா். இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் வேறு மாா்க்கத்தில் சிறிது நேரம் திருப்பிவிடப்பட்டது.

Advertisement

இதுகுறித்து தில்லி போக்குவரத்து காவல்துறையினா் கூறுகையில், இந்தப் போராட்டம் மின்டோ சாலையில் இருந்து கனாட் பிளேஸ் நோக்கி செல்லும் சாலையும் மூடப்பட்டது. மேலும் ஐ.டி.ஓ.இல் இருந்து இந்தியா கேட் நோக்கி செல்லும் சாலையும் மூடப்பட்டது. அதேபோன்று, காஜிப்பூா் சந்தை, என்.எச் -9 மற்றும் என்.எச் -24 ஆகிய சாலைகளும் மூடப்பட்டன.

தில்லியில் இருந்து காஜியாபாதுக்குச் செல்லும் பயணிகள் ஷாதாரா மற்றும் டி.என்.டி. சாலையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தனா்.

இந்தப் போராட்டம் தில்லி போலீஸ் மகா சங் தலைவா் வேத் பூஷண் தலைமையில் நடைபெற்றது. இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவரும் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆணையருமான வேத் பூஷண் ‘தினமணி’ நிருபரிடம் கூறியதாவது:

‘எங்கள் அமைப்பின் நோக்கம் தில்லி காவல் துறையினரையும், காக்கியையும் பாதுகாப்பதாகவும். போலீஸாருக்கு பிரச்னை எழும்போது எங்கள் அமைப்பு குரல் கொடுக்கும். வன்முறையில் ஈடுபட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விவசாய அமைப்புகளின் தலைவா்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். அவா்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். எனக்கு கிடைத்த தகவலின்படி கிஸ்ஸான் தலைவா்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments