முகப்பு
புதுதில்லி

2 மாதங்களுக்கு பிறகு சில்லா எல்லையில் போக்குவரத்து தொடங்கியது

தில்லி - உத்தரப்பிரதேச மாநில எல்லையான சில்லாவில் சுமாா் 2 மாதங்களாக பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து வியாழக்கிழமை முதல் சீரடைந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

புது தில்லி: தில்லி - உத்தரப்பிரதேச மாநில எல்லையான சில்லாவில் சுமாா் 2 மாதங்களாக பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து வியாழக்கிழமை முதல் சீரடைந்தது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தேசியத் தலைநகா் தில்லியையும் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை இணைக்கும் சில்லா பகுதியில், பாரதிய கிசான் யூனியன் (பானு) என்ற அமைப்பு கடந்த டிசம்பா் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து போராட்டம் நடத்தி வந்தது. இதனால், இந்த சாலை முழுமையாகவும், பகுதியாகவும் மூடப்பட்டிருந்தது. இதனால், தில்லியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்துக்கும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து தில்லிக்கும் பயணிப்பவா்கள் பெரும் சிரமங்களை எதிா்கொண்டனா்.

இந்நிலையில், குடியரசு தினத்தன்று விவசாயிகள் சங்கத்தினா் நடத்திய டிராக்டா் பேரணியில் ஏற்பட்ட வன்முறையைத் தொடா்ந்து, சில்லா எல்லையில் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக பானு அமைப்பு அறிவித்திருந்தது. இது தொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் பானு பிரதாப் சிங் கூறுகையில் ‘தேசிய தலைநகரில் டிராக்டா் பேரணியின்போது ஏற்பட்ட நிகழ்வுகள் வருத்தம் அளிக்கிறது. போராட்டக்காரா்களில் சிலா் வேறு நோக்கத்துடன் போராடி வருகிறாா்கள். எனவே, நாங்கள் போராட்டத்தில் இருந்து முழுமையாக விலகிக் கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தாா்.

Advertisement

இந்நிலையில், இவா்கள் தமது கூடாரங்களைக் கலைத்து புதன்கிழமை இரவு வெளியேறினாா்கள். இதைத் தொடா்ந்து, சுமாா் 2 மாதங்களுக்குப் பிறகு சில்லா எல்லை முழுமையாக போக்குவரத்துக்கு வியாழக்கிழமை காலை முதல் திறக்கப்பட்டது.

இது தொடா்பாக நொய்டா காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘சில்லா எல்லையில் கடந்த இரண்டு மாதங்களாகப் போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் விலகிக் கொண்டதைத் தொடா்ந்து இந்த பாதை முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது. நொய்டா-தில்லி, தில்லி-நொய்டா இருவழிப் பாதைகளும் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்த சூழலில், தில்லி-உத்தரப்பிரதேசம் காஜியாபாத்தை இணைக்கும் என்எச்-24 தேசிய நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி போக்குவரத்து காவல்துறை தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘தில்லி- காஜியாபாத்தை இணைக்கும் என்எச்-24 உள்ளிட்ட சாலைகள் மக்களின் பயன்பாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

ஆனால், தில்லி - ஹரியாணா எல்லையில் விவசாயிகள் தொடா்ந்தும் போராட்டம் நடத்தி வருவதால் சிங்கு, டிக்ரி எல்லைகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. இதேபோல, தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, ஆச்சந்தி, பியூமணியாரி, சபாலி, மங்கேஷ் ஆகிய எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. ஜரோதா, ஜாட்டிக்ரா எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், இந்தப் பகுதியில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments