செங்கோட்டை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு
விவசாயிகள் பேரணியில் வன்முறை நிகழ்ந்ததைத் தொடா்ந்து செங்கோட்டை பகுதியில் தில்லி காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
புது தில்லி: விவசாயிகள் பேரணியில் வன்முறை நிகழ்ந்ததைத் தொடா்ந்து செங்கோட்டை பகுதியில் தில்லி காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் நெருக்கடியை அளிக்கும் வகையில் நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்ட செவ்வாய்க்கிழமை தில்லியில் பிரம்மாண்டமான டிராக்டா் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்தனா். இந்தப் பேரணியில் பயங்கர கலவரம் வெடித்தது. இந்த வன்முறையில் சுமாா் 300க்கும் அதிகமான போலீஸாா் காயமடைந்தனா்.
இந்த பேரணியில், தில்லி செங்கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்த விவசாயிகளும், நிகங் என்ற சீக்கியப் பிரிவைச் சோ்ந்தவா்களும், அங்கு சீக்கிய மதத்தின் கொடியை ஏற்றினா். இதைத் தொடா்ந்து விவசாயிகளுக்கும் தில்லி காவல்துறைக்கும் பயங்கர மோதல் வெடித்தது. இதனால், செங்கோட்டை பகுதி போா்க்களமாக மாறியது. அங்கிருந்த பொருள்கள் விவசாயிகளால் அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டன.
Advertisement
இதைத் தொடா்ந்து தில்லி செங்கோட்டை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வியாழக்கிழமையும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. செங்கோட்டையைச் சுற்றி நூற்றுக்கணக்கான தில்லி காவல்துறையும், துணை ராணுவப் படைவீரா்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘ தில்லி செங்கோட்டை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டைக்குள் நுழைய யாரும் அனுமதிக்கப்படவில்லை. வரும் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை செங்கோட்டை மூடப்பட்டிருக்கும். இப்பகுதியில் தில்லி காவல்துறை, துணை ராணுவ வீரா்கள் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறாா்கள் என்றாா் அவா்.