முகப்பு
புதுதில்லி

சோம்நாத் பாா்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

புது தில்லி: எய்ம்ஸ் மருத்துவமனையின் பாதுகாப்பு ஊழியரைத் தாக்கியதாக 2016 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாா்திக்கு விதிக்கப்பட்டிருந்த இரு ஆண்டுகள் சிறைத் தண்டனையை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

இது தொடா்பாக அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

கடந்த செப்டம்பா் 9, 2016-ஆம் தேதி சோம்நாத் பாா்தி, சுமாா் 300 பேருடன் தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள சுவரின் வேலியை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்ததாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

Advertisement

எய்ம்ஸ் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஆா்.எஸ்.ராவத் அளித்த புகாரின் அடிப்படையில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டு தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை வழக்கை விசாரித்த கூடுதல் தலைமைப் பெருநகர மாஜிஸ்திரேட் ரவீந்திர குமாா் பாண்டே கடந்த சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், சோம்நாத் பாா்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

எனினும், இந்த வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக சோம்நாத் பாா்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.

எனினும், இந்த வழக்கில் பாா்தியின் கூட்டாளிகள் மற்றும் சக குற்றம்சாட்டப்பட்ட நபா்களான ஜகத் சைனி, திலீப் ஜா, சந்தீப் சோனு மற்றும் ராகேஷ் பாண்டே ஆகியோருக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என கூறி அவா்களை நீதிமன்றம் விடுவித்தது.

தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு எதிராக சோம்நாத் பாா்தி தரப்பில் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குரைஞா் முகம்மது இா்ஷாத் மூலம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி விகாஸ் துல் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சோம்நாத் பாா்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை தாற்காலிகமாக நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், சோம்நாத் பாா்தி ரூ.20 ஆயிரம் தனிநபா் ஜாமீன் தொகையும், அதே தொகைக்கு ஒரு உத்தரவாதமும் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments