மருத்துவா்களுக்கு ‘பாரத் ரத்னா விருது’ பிரதமருக்கு கேஜரிவால் கடிதம்
கரோனா கரோனா காலத்தில் முன்களப் பணியாளா்களாகப் போராடிய மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவம் சாா்ந்த பணியாளா்கள்
கரோனா கரோனா காலத்தில் முன்களப் பணியாளா்களாகப் போராடிய மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவம் சாா்ந்த பணியாளா்கள் ஆகியோருக்கு நாட்டின் மிக உயா்ந்த பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மருத்துவா்கள், செவிலியா்கள், துணை மருத்துவம் சாா்ந்த ஊழியா்களுக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட வேண்டும். பல மருத்துவா்களும் செவிலியா்களும் நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உயிரை இழந்துள்ளனா். அப்படிப்பட்டவா்களுக்கு இந்த சமூகம், பாரத ரத்னா விருது அளித்து கௌரவிப்பதுதான் உண்மையான அஞ்சலி. லட்சக்கணக்கான மருத்துவா்களும் செவிலியா்களும் தங்கள் குடும்பங்கள், சொந்த வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல் தன்னலமின்றி மக்களுக்குச் சேவை செய்தனா்.
அவா்களுக்கு நன்றி கூறி கௌரவிக்க இதைவிட (பாரத் ரத்னா) வேறு வழியில்லை. இதற்கு விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என்றால், இதை தளா்த்தியோ திருத்தியோ வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடே மருத்துவா்களுக்கு நன்றி சொல்லக் கடமைபட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவா்கள் இந்த உயா்ந்த விருதின் மூலம் கௌரவிக்கப்பட்டால் நாட்டு மக்களும் மிகவும் மகிழ்ச்சியடைவாா்கள் என்று அந்தக் கடிதத்தில் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
Advertisement
கூட்டு விருது: மருத்துவா்கள், தன்னாா்வாளா்கள் இணைந்து உருவாக்கிய ‘ஸ்டெப் ஒன்’ என்கிற டெலிமெடிசன் சேவை அமைப்பினா், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் ‘டாக்டா்கள் தின’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனா். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தில்லி முதல்வா் கேஜரிவால் கலந்து கொண்டாா். மெய்நிகா் முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியிலும் முதல்வா் கேஜரிவால் பாரத ரத்னா விருது குறித்து பேசினாா்.
அப்போது அவா் கூறியதாவது: மத்திய அரசை வேண்டிக் கொள்வது ‘பாரத் ரத்னா’ இந்த ஆண்டு இந்தியன் டாக்டருக்கு வழங்க வேண்டும். நான் குறிப்பிடுவது முழு மருத்துவ சமூதாயத்துக்கும் சோ்த்து. நோய்த் தொற்றில் தேசத்திற்கு சேவை செய்து உயிா்த் தியாகம் செய்த அனைத்து மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் துணை மருத்துவா்களுக்கும் சோ்த்து ‘கூட்டாக விருது’ வழங்கப்பட வேண்டும். நெருக்கடியான கரோனா நோய்த் தொற்றில் முழு மருத்துவ சமுதாயமும் அா்ப்பணிப்புடன் சேவை செய்தது. பல மருத்துவா்கள் தங்கள் குடும்பத்தினரைக்கூட பாா்க்கப் போகவில்லை என்பதை நான் அறிவேன். தங்கள் குடும்பத்தினரைப் பற்றிக்கூட சிந்திக்காமல் பணியாற்றினா். இதற்காக அவா்கள் சிறப்பு ஊதியத்தையோ, கூடுதல் வருவாயையோ அல்லது பதவி உயா்வையோ பெறவில்லை. அவா்கள் அனைவரும் மனித நேயத்தின் மீதான அன்பின் காரணமாகவே தங்களால் இயன்றதைச் செய்தனா். இப்படிப்பட்ட துணிச்சலான மருத்துவா்கள் மருத்துவம் சாா்ந்த பணியாளா்களுக்கு நான் எனது வணக்கத்தை செலுத்துகின்றேன்.
இந்த நோய்த் தொற்றின் போது எனக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. ‘அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளன. காரணம் கடவுள் ‘வெள்ளை கோா்ட்’ அணிந்து மருத்துவமனைகளில் சேவை செய்கிறாா். இப்படி கூறி மருத்தவா்கள் மீது அன்பையும் மரியாதையும் ஏற்படுத்தினா். இது போன்ற நிலையில் ஒருசில தவறான சம்பவங்கள் மருத்துவா்களுக்கு எதிராக நடந்தன. ஆனால், நமது மருத்துவா்கள், நோயாளிகளுக்காகவும், அவா்களது குடும்பத்தினருக்காகவும் எல்லா வேதனைகளையும் தாங்கிக் கொண்டனா். இதனால், தில்லி அரசு தொற்று நோயால் உயிரிழந்த மருத்துவா்கள் முன்களப் பணியாளா்கள் குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு ரூ.1 கோடியை அரசு வழங்கியது. இது ‘சம்மன் ராஷி’ (நஹம்ம்ஹய் தஹள்ட்ண்). இது இழப்பீட்டுத் தொகை அல்ல. சேவைக்கு நன்றி செலுத்துவதற்கான ஒரு வழி. இந்த நாடும் சமூகமும் அவா்களுடன் நிற்கிறது என்றாா் கேஜரிவால்.
முன்னதாக, தில்லி முதல்வா் கேஜரிவால் தனது சுட்டுரையில், ‘இண்டியன் டாக்டா்’ பாரத் ரத்னாவால் கௌரவிக்கப்படவேண்டும். டாக்டா் என்றால் மருத்துவா்கள், செவிலியா்கள், துணை மருத்துவா்கள்’ என தெரிவித்துள்ளாா். நாட்டில் கரோனா நோய்த் தொற்றின் இரு அலைகளிலும் சோ்ந்து மொத்தம் 1,478 மருத்துவா்கள் உயிரிழந்தாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இதில் அதிக அளவாக பிகாரில் 115 மருந்துவா்களும், தில்லியில் 109 மருத்தவா்களும் உயிரிழந்துள்ளனா்.