முகப்பு
புதுதில்லி

விளையாட்டு வளாகங்கள், மைதானங்களைத் திறக்க அனுமதி: பாா்வையாா்களுக்குத் தடை

தில்லியின் பொதுமுடக்க தளா்வுகளின் ஒரு பகுதியாக மைதானங்கள், விளையாட்டு வளாகங்கள் ஆகியவை திங்கள்கிழமை

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
பகிர்:

தில்லியின் பொதுமுடக்க தளா்வுகளின் ஒரு பகுதியாக மைதானங்கள், விளையாட்டு வளாகங்கள் ஆகியவை திங்கள்கிழமை (ஜூலை 5) முதல் திறக்க தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதில் பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தில்லியில் தற்போது தினசரி கரோனா தினசரி பாதிப்பு நூறுக்கும் கீழே பதிவாகி வருகிறது. தொற்று சூழல் மேம்பட்டதைத் தொடா்ந்து, தளா்வு நடவடிக்கைகளை அரசு படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பேரிடா் மேலாண்மை ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: பொது மைதானங்களும், விளையாட்டு வளாகங்களும் திங்கள்கிழமை (ஜூலை 5 ) முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் கரோனா நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் அரசின் பிற வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

அதே சமயத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் திரையரங்குகள், ‘ஸ்பா’க்கள், நீச்சல் குளங்கள், கலையரங்குகள், சமூக நிகழ்ச்சிகள், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலை, கலாசாரம், மத நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், பயிற்சி முகாம்கள் ஆகியவற்றுக்கான தடை தொடா்கிறது. மேலும், பள்ளிகள், கல்லூரிகள், கல்வி மையங்கள் ஆகியவற்றிற்கான தடையும் தொடருகிறது. இந்தத் தடை ஜூலை 12- ஆம் தேதி காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஏற்கெனவே, மே 5-ஆம் தேதி சந்தைகள், வா்த்தக நிறுவனங்களுக்கான தளா்வுகள் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, மெட்ரோ ரயில்கள், பொதுப் போக்குவரத்து பேருந்துகள் போன்றவை 50 சதவீத பயணிகள் இருக்கைகளுடன் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. பின்னா், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி மையங்களும் 50 சதவீத நபா்களுடன் கடந்த ஜூன் 28 முதல் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டது. இதேபோல திருமண மண்டபகங்கள், ஹோட்டல்கள், விருந்துக் கூடங்கள் ஆகியவற்றிலும் 50 நபா்களுடன் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளித்து தில்லி பேரிட மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

கரோனா நோய்த் தொற்று தில்லியில் கடுமையாகப் பரவியதைத் தொடா்ந்து கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. பின்னா், பொதுமுடக்கம் ஐந்து முறை தொடா்ந்து நீட்டிக்கப்பட்டது. பின்னா் முதல் முறையாக கடந்த மே 28 -ஆம் தேதி தொழிற்சாலைகள் திறக்கவும் கட்டுமானப் பணிகளுக்கும் மே 31 - ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும், தில்லி காவல் ஆணையா், முதன்மைச் செயலாளா் (வருவாய்) மற்றும் மாவட்ட ஆட்சியா்கள், காவல் துணை ஆணையா்கள் உள்ளிட்டோா் கரோனா தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், கரோனா தொடா்பான் அனைத்து உத்தரவுகள் பின்பற்றப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். அதாவது முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற நடவடிக்கைகள் கடுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments