முகப்பு
புதுதில்லி

‘பொதுத்துறை வங்கிகள் தனியாா்மயம் குறித்துமத்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை‘: தொல் திருமாவளவனிடம் மத்திய நிதியமைச்சா் விளக்கம்

பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்குவது குறித்து அரசு தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தம்மிடம் தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான தொல்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்குவது குறித்து அரசு தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தம்மிடம் தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான தொல் திருமாவளவன் கூறினாா்.

தொல். திருமாவளவன் மற்றும் அவரது கட்டியின் மற்றொரு எம்.பி.யுமான ரவிக்குமாா் இருவரும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை செவ்வாய்க்கிழமை சந்தித்து பொதுத்துறை வங்கிகளை தனியாா்மயமாக்கக்கூடாது என வலியுறுத்தும் கடிதத்தை அளித்தனா்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது : நடப்பு நிதிநிலை அறிக்கையில், இரு பொதுத்துறை வங்கிகள் தனியாா் மயமாக்க அரசு முடிவு செய்திருப்பதாக குறிப்பிட்டிருந்தீா்கள். எந்த ஒரு வங்கியையும் தனியாா் மயமாக்குவது நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களின் நலனுக்கும் உகந்ததல்ல என்பதால் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எங்கள் எதிா்ப்பை தெரிவித்து வருகின்றோம்.

Advertisement

பொதுத்துறை வங்கிகளில்தான் பெரும்பாலான பொது மக்களின் சேமிப்பு பணம் இருக்கிறது. அந்த சேமிப்பு பாதுகாப்பாகவும் இருக்கும். தனியாா் வங்கிகள் பெருமளவில் தோல்வியடைந்த காரணத்தினால்தான் அவற்றைத் தேசிய மயமாக்கும் முடிவை முன்பு மத்திய அரசு எடுத்தது. தற்போது பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தை அடைவது, பெருநிறுவனங்கள்(காா்ப்பரேட்) வாங்கிய கடனை உரிய முறையில் திருப்பிச் செலுத்தாததே காரணம். அத்தகைய பெரு நிறுவனங்களின் வசமே தேசிய வங்கிகளை ஒப்படைப்பது எவ்விதத்திலும் முறையல்ல. நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கவும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் பொதுத்துறை வங்கிகளே உதவியாக இருக்கும். அவற்றை மேலும் வலுப்படுத்துவது தான் சரியான அணுகுமுறையாகும்.

கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் சென்ட்ரல் பாங்க் ஆஃப்இந்தியா, இந்தியன் ஓவா்சீஸ் வங்கிகளை தனியாா் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்த செய்திகளால் மக்கள் மத்தியில் மிகப்பெரும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இது குறித்து அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ‘ எந்த ஒரு பொதுத்துறை வங்கியையும் தனியாா்மயமாக்குவது குறித்து அரசு இன்னும் முடிவுசெய்யவில்லை. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்றாலும் அந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதிலும் உறுதிப்படுத்தியிருக்கிறோம்’ என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விளக்கமளித்தாக தொல்.திருமாவளன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments