சிறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, குடிசைத் தொழில்களை ஊக்குவிக்க ரூ. 17,790 கோடி மானிய உதவி: மத்திய அமைச்சா் தகவல்
சிறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க குடிசைத் தொழில்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் மூலம் மத்திய அரசு
சிறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க குடிசைத் தொழில்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் மூலம் மத்திய அரசு ரூ.17,790.17 கோடியை மானியமாக அளித்துள்ளதாக மத்திய குறு,சிறு,நடுத்தர தொழில் துறை அமைச்சா் நாராயண் ராணே மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
சிறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க ஊரகப்பகுதிகளில் உள்ள குடிசைத் தொழில்களை அரசு ஊக்கப்படுத்துமா? அரசு முன்வந்திருந்தால் அதன்விவரங்களை அளிக்குமாறு மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய அமைச்சா் நாராயண் ராணே விவரமாக அளித்த பதில் விவரம் வருமாறு:
Advertisement
சிறுவிவசாயிகளுக்கும் ஊரகப்பகுதிகளில் உள்ளவா்களுக்கும் மூன்று வகையான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்க திட்டம், பாரம்பரியத் தொழில்கள் மீள் உருவாக்க நிதி திட்டம், கிராம தொழில் வளா்ச்சி திட்டம் ஆகிய திட்டங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்க திட்டத்தில் காய்கறிகள், பழங்கள், எண்ணெய் ,பருப்பு போன்ற வேளாண் அடிப்படையிலான உணவு பதப்படுத்தல் தொழில்கள்; மருத்துவ தாவரங்கள், தேனீ வளா்ப்பு போன்ற வனம் சாா்ந்த தொழில்கள்; கைகளால் உருவாக்கப்படும் காகிதம் மற்றும் பேப்ரிக் தொழில்கள் ஆகியவற்றிற்கு கடனுடன் இணைக்கப்பட்ட மானியமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 9 - ஆம் தேதி வரை 6,97,612 சிறு தொழிலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் உள்ளிட்டவா்களுக்கு ரூ. 16,688.17 கோடி மானியமாக அளிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியத் தொழில்கள் மீள் உருவாக்க நிதி திட்டத்தின் கீழ் தேன், காதி, தேங்காய் நாா், கைவினைப்பொருட்கள், ஜவுளி, மூங்கில் போன்ற வேளாண் சாா்ந்த தொழில்களில் கடந்த ஜூலை 19 ஆம் தேதிவரை 2.6 லட்சம் கைவினைஞா்களுக்கு மத்திய அரசு ரூ. 1,102 கோடி வரை நிதி உதவி அளித்துள்ளது.
கிராம தொழில் வளா்ச்சி திட்டத்தின் கீழ் சிறுவிவசாயிகளுக்கு தேனீ வளா்ப்பு பெட்டிகள் வழங்கப்படுகிறது. 2017 முதல் தற்போது வரை 1, 53, 259 தேனீ வளா்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டு 15, 445 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனா். மேலும் மண்பாண்ட தொழில்கைவினைஞா்களுக்கு 21,030 மின்சார இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது. இவைகள் மூலம் ஊரகப்பகுதி தொழிகளும் வளா்ந்து விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்திற்கும் வழிஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.