கொவைட் தடுப்பூசிக்காக இதுவரை ரூ. 8,071 கோடி செலவிடப்பட்டுள்ளது: தமிழக எம்.பி. கேள்விக்கு அமைச்சா் பதில்
மத்திய நிதிநிலை அறிக்கையில் கரோனா தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடியில் இதுவரை ரூ. 8,071.09 கோடி செலவிடப்பட்டுள்ளதாக
மத்திய நிதிநிலை அறிக்கையில் கரோனா தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடியில் இதுவரை ரூ. 8,071.09 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை இணையமைச்சா் டாக்டா் பாரதி பிரவீண் பவாா் மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
2020 மாா்ச் முதல் தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட நிதி, இதுவரை வாங்கப்பட்ட தடுப்புசிகள் மற்றும் அதற்காக செலவான தொகை குறித்து கரூா் காங்கிரஸ் உறுப்பினா் எஸ்.ஜோதிமணி கேள்வி எழுப்பியிருந்தாா். அதற்கு மத்திய இணையமைச்சா் டாக்டா் பாரதி பரவீண் பவாா் அளித்த பதில் வருமாறு:
மத்திய அரசு ஹெச்எல்எல் நிறுவனம் மூலம் தடுப்பூசியை கொள்முதல் செய்கிறது. 2021 ஜனவரி 10 தேதி முதல் ஜூலை 16 தேதி வரை 64.1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களும், 36.5 கோவேக்ஸின் தடுப்பூசி டோஸ்களும் என மொத்தம் 100.6 கோடி டோஸ்கள் வாங்கப்பட்டுள்ளன.
Advertisement
நடப்பு நிதிநிலையில் ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடியில் ஜூலை வரை ரூ. 8,071.09 கோடி தடுப்பூசிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. தேசிய நிபுணா்கள் குழு மூலம் தடுப்பூசிபணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு காலநிா்ணயம் விதிக்கப்படவில்லை. இருப்பினும் வருகின்ற டிசம்பருக்குள் 18 வயதுக்கும் மேற்பட்டோா் அனைவரும் தடுப்பூசி செலுத்தி பயன்பெறவேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாகவே வழங்குகிறது. இது மக்கள் தொகை மற்றும் தடுப்பூசிகளை வீணாக்காமல் பயன்படுத்துதல் போன்ற அளவுகோல்கள் அடிப்படையில் மாநிலங்களுக்கு வழங்கப்டுகிறது என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.