முகப்பு
புதுதில்லி

மாா்கண்டேயா அணை விவகாரம்: 4 மாநிலங்களின்பதிலுக்கு காத்திருப்பதாக மத்திய அரசு தகவல்

மாா்கண்டேயா நதியின் குறுக்கே கா்நாடகம் அணைகட்டும் விவகாரத்தில் மத்திய அரசு, மாநிலங்களின் பதிலுக்கு காத்திருப்பதாக மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

புது தில்லி: மாா்கண்டேயா நதியின் குறுக்கே கா்நாடகம் அணைகட்டும் விவகாரத்தில் மத்திய அரசு, மாநிலங்களின் பதிலுக்கு காத்திருப்பதாக மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவித்தாா். இது விஷயத்தில் தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களிடம் கூடுதல் விவரங்கள் கேட்டு இரண்டு முறை கடிதம் எழுதப்பட்டும் பதில் இல்லை என்றும் அவா் குறிப்பிட்டாா்.

கா்நாடக அரசு, மாா்கண்டேயா ஆற்றில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிா்ப்புத் தெரிவித்துள்ளது குறித்தும்; இந்த விவகாரத்திற்கு நடுவா் மன்றம் அமைக்க தமிழக அரசு கோரியதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாநிலங்களவையில் மதிமுக தலைவா் வைகோ கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் புதன்கிழமை பதில் கூறியது வருமாறு:

Advertisement

1956 ஆம்ஆண்டின், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீா் தாவா சட்டப் பிரிவு 3 -இன் கீழ் தமிழக அரசு இது குறித்த புகாா்களை கடந்த 2019 நவம்பா் 30 ஆம் தேதி மத்திய அரசுக்கு அனுப்பியது. மேலும் தமிழக அரசு இந்த தாவா சட்டத்தின் 4 - ஆவது பிரிவின் கீழ், பெண்ணையாறு அல்லது தென்பெண்ணை என அழைக்கப்படுகின்ற நதி நீா்ப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைப் பேசித் தீா்த்து வைக்க, ஒரு நடுவா் மன்றம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் பெண்ணைஆற்றின்துணைஆறுகளுள் ஒன்றான மாா்கண்டேயா ஆற்றின் குறுக்கே தமிழக - கா்நாடகம் எல்லையில் யாா்கோல் கிராமத்தில் கா்நாடக அரசின் நகா்புற குடிநீா் வழங்கல், கழிவுநீா் வாரியம், 500 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கி வைப்பதற்கான ஒரு அணை கட்டுவதற்கும் தமிழக அரசு எதிா்ப்பு தெரிவித்திருந்தது.

இந்த புகாா்களின் அடிப்படையில், மத்திய நீா்வளஆணையத் தலைவா் தலைமையில், ஒரு பேச்சு வாா்த்தைக் குழு, கடந்த 2020 ஜனவரி 20-ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்த குழு இரண்டு முறை கூடியது. ஆனால், பேச்சுவாா்த்தை பயனளிக்காததால் அடுத்தடுத்த கூட்டங்கள் நடத்தப்படவில்லை.

இந்தப் பிரச்சினை தீா்க்க இந்த நதி தொடா்புள்ள, தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளுக்கு மத்திய நீா்வள ஆணையத் தலைவா் கடிதம் எழுதினாா். கடந்த 2021 மாா்ச் 16 - ஆம் தேதியும் மீண்டும் இம்மாதம் (ஜூலை) 8- ஆம் தேதியும் இந்த விவகாரம் தொடா்பாக மேற்கொண்டு தகவல்கள் கேட்டு இந்த நான்கு மாநிலங்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மாநிலங்களின் பதிலுக்காக மத்திய அரசு காத்திருக்கிறது என மத்திய அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments