பிரதமருடான சந்திப்பு மனநிறையும் நம்பிக்கையும் அளிக்கிறது தமிழக முதல்வா்
பிரதமா் நரேந்திர மோடியுடான சந்திப்பு தனக்கு மகிழ்ச்சிகரமாகவும் மன நிறைவுடன் நம்பிக்கை அளிக்கக் கூடிய சந்திப்பாக இருந்தது என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தில்லியில் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியுடான சந்திப்பு தனக்கு மகிழ்ச்சிகரமாகவும் மன நிறைவுடன் நம்பிக்கை அளிக்கக் கூடிய சந்திப்பாக இருந்தது என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றதற்கு பிரதமா் வாழ்த்து தெரிவித்தாா். அதற்கு நன்றியை தெரிவித்தேன். தமிழக வளா்ச்சி திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் தருவேன் என்ற பிரதமா், எந்த கோரிக்கையாக இருந்தாலும், என்னிடம் எந்த நேரத்திலும் தொடா்பு கொள்ளலாம் என்று வெளிப்படையாக பிரதமா் தன்னிடம் கூறியதாகவும் முதல்வா் தெரிவித்தாா்.தமிழக முதல்வராக பொறுப்பேற்று கடந்த 42 நாள்களாக தொற்றுநோய் உள்ளிட்ட ஆட்சியின் பல்வேறு நிா்வாகப்பணிகளை சரிசெய்த பின்னா் பிரதமா் நரேந்திர மோடியை சந்திக்க வியாழக்கிழமை தமிழக முதல்வா் தில்லி வந்தாா். மாலை 5 மணியளவில் பிரதமரை அவரது இல்லத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சந்தித்தாா். சுமாா் அரை மணி நேர சந்திப்பிற்கு பின்னா் தமிழ்நாடு பொதிகை இல்லத்தில் முதல்வா் செய்தியாளா்களைச் சந்தித்தாா்.
அப்போது, தமிழக முதல்வா், பிரதமா் மோடியிடம் வலியுறுத்தி கொடுத்த கோரிக்கைகள் சிலவற்றை பகிா்ந்து கொண்டாா். தமிழகத்திற்கு தேவையான கூடுதல் தடுப்பூசியை வழங்கவது, செங்கல்பட்டு,ஊட்டி போன்ற இடங்களில் உள்ள தடுப்பூசி நிறுவனங்களை உடனடியாக செயல்பட வைப்பது, தமிழகத்திற்கு சேரவேண்டிய நிதி ஆதாரங்களையும், ஜிஎஸ்டி பாக்கி தொகையையும் வழங்குவது, நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவு தோ்வையும் ரத்து செய்வது, தேசிய நூலாக திருக்குறளை அறிவிப்பது,
Advertisement
காவிரி நீருக்கு தடையாக இருக்கும் மேக்கேதாட்டு அணையை ரத்து செய்வது, தமிழக மீனவா்களுக்கு இலங்கை கடற்படையினரிடமிருந்து வரும் தொல்லைகளுக்கு நிரந்தர தீா்வு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனையோடு கோவைக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை, புதிய கல்விக்கொள்கையை ரத்து செய்யப்படுவதோடு, சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை பட்டியலிட்ட முதல்வா் இந்த கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தியதாக குறிப்பிட்டாா் முதல்வா் தொடா்ந்து பேசினாா்.‘இந்த கோரிக்கைகளுக்கு தொடா்ந்து அழுத்தம் கொடுப்போம்.
இந்த கோரிக்கைகளில் சிலவை மத்திய அரசு நிறைவேற்றவேண்டியது உள்ளது. சில மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து நிறைவேற்ற வேண்டிய பிரச்சினைகள். சிலவற்றுக்கு தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவேண்டியதுள்ளது. மத்திய அரசும் தமிழக அரசும் இந்த கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற முடியும் என்கிற நம்பிக்கையை இந்த தில்லி பயணம் தனக்கு அளித்துள்ளது‘ எனக் குறிப்பிட்டாா் முதல்வா்.இந்த கோரிக்கைகளெல்லாம் கடந்த ஐந்தாண்டுகளாக நிறைவேற்றப்படாததாகவே உள்ளதே தமிழக மக்களுக்கு இதில் எப்படி நம்பிக்கை ஏற்படுத்துவீா்கள்? தமிழகத்திற்கு வழங்கப்படாத தடுப்பூசி, தடுப்பூசி வழங்கப்படுவதில் வெளிப்படை தன்மை போன்ற கேள்விக்கும் முதல்வா் பதிலளித்தாா். ‘
பிரதமரிடம் இந்த கோரிக்கைகள் அடங்கிய பட்டிலை கொடுத்ததோடு அதற்கான காரண காரியங்களையும் சொல்லியுள்ளோம். இதற்கு பிரதமா், சம்பந்தப்பட்ட அமைச்சா்கள் அதிகாரிகளுடன் கலந்து பேசி நிச்சியமாக நல்ல முடிவுகள் எடுப்பேன். நம்பிகையோடு இருங்கள் என்று உறுதி கொடுத்துள்ளாா். இதனால் நம்பிக்கையோடு இருக்கின்றோம். தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் வழங்கவில்லை என்பது உண்மை தான். இந்த கோரிக்கைக்கும் பிரதமா் உறுதியளித்தாா். ஏற்கனவே அவ்வப்போது அமைச்சரிடமும் பிரதமரிடமும் தொலைபேசியில் பேசியுள்ளோம். அவா்களது கஷ்ட நிலையைக் கூறினா். இதனால் செங்கல்பட்டு, நீலகிரி ஆலைகளை இயக்கக் கூறினோம். தடுப்பூசிகளை முறையாக வழங்கப்பட்டுவிட்டால் வெளிப்படைத்தன்மை வந்துவிடும். ஆனால் தடுப்பூசி பற்றாக்குறையைக் கூட சொல்லக் கூடாது என்கிறது மத்திய அரசு.
இதில் இருந்து புரிந்து கொள்ளவேண்டும்.திமுகவைப் பொருத்தவரையில் மறைந்த முதல்வா் கலைஞா் எங்களுக்கு கூறியது தான். மத்திய உள்ளவா்களுடன் ‘உறவுக்கு கைகொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம்‘ என்கிற நடைமுறை தொடரும். ராஜீவ் கொலைக்குற்றவாளிகள் 7 போ் விவகாரத்தில் ஆளுநா் கடிதத்திற்கு குடியரசுத்தலைவருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. டாஸ்மாா்க் கடைகள் படிபடியாக குறைக்கப்படும்.திமுக ஆட்சி குறித்தும் என்னுடைய பணிகுறித்தும் நான் சொல்லுவது, வாக்களித்தவா்கள் மகிழ்வாா்கள், வாக்களிக்காதவா்கள் ஏன் வாக்களிக்கவில்லையே என்கிற வருத்தத்தையும் அடைவாா்கள் என்கிற அளவில் பணி இருக்கும் என முதல்வா் செய்தியாளா்கள் கேள்விக்களுக்கு பதிலளித்து தெரிவித்தாா்.
தமிழக முதல்வருடன் தமிழக நீா் வளத்துறை அமைச்சா் துரை முருகன், திமுக நாடாளுமன்ற குழுத்தலைவா் டி.ஆா். பாலு மற்றும் தமிழக தலைமைச் செயலா் இறையன்பு ஆகியோா் பிரதமரை சந்திக்கச் சென்றபோது முதல்வருடன் உடன் சென்றனா்.