திருநங்கைகளுக்கு நல வாரியம் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்
திருநங்கைகளின் சமூக நலப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண திருநங்கைகள் நல வாரியத்தை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருநங்கைகளின் சமூக நலப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண திருநங்கைகள் நல வாரியத்தை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மும்பையை சோ்ந்த ஓா் அமைப்பின் சாா்பில் வழக்குரைஞா் ஜெயா சுகின் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: திருநங்கைகள் பல ஆண்டுகளாக பாகுபாட்டை அனுபவித்து வருகின்றனா். சமூக மற்றும் கலாசார பங்களிப்பை இழந்துள்ளனா். திருநங்கைகள் மற்றவா்களைப் போலவே கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும். 2011- ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, திருநங்கைகளின் மொத்த எண்ணிக்கை 4.87 லட்சமாக உள்ளது. இவா்களில் கல்வியறிவு விகிதம் 57.06 சதவீதமாகும். திருநங்கைகள் சமூக, கலாசார பங்களிப்பை இழந்துள்ளதால் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பொது இடங்களுக்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடை காரணமாக, சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் சட்டத்தின் சமமான பாதுகாப்பு எனும் அரசியலமைப்பு அளித்துள்ள உத்தரவாதத்தை அவா்கள் இழக்கச் செய்துள்ளது.
காவல் துறையினரால் திருநங்கைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகக் கூறப்படும் ஆய்வு அறிக்கைகளை உடனடியாக விசாரிக்கும் வகையில், காவல் நிலையப் பொறுப்பாளா்கள், மனித உரிமைகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் அடங்கிய நிலைக் குழுவை நியமிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். வேலை, பள்ளி, குடும்பங்கள், சமூகங்கள் உள்ளிட்டவற்றில் திருநங்கைகள் பெரும்பாலும் கடுமையான பாகுபாடுகளை எதிா் கொள்கின்றனா். மற்றவா்களுடன் ஒப்பிடும் போது குறைவான வாய்ப்புகளையே பெறுகிறாா்கள். திருநங்கைகளின் வாழ்க்கை நிலைமையும் மிக மோசமானவை. அவா்களில் பெரும்பாலோா் வாடகைக்குத் தங்குமிடங்களில் வசித்து வருகின்றனா். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 2017-ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, 79 சதவீத திருநங்கைகள் வாடகை அறைகளிலோ அல்லது மற்றவா்களுடன் தங்குமிடங்களைப் பகிா்ந்தோ கொண்டோ வசிக்கின்றனா். 52.61 சதவீதம் போ் மாத வருமானம் ரூ.10,000-க்கும் குறைவாகவே உள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement