முதல்வா் கேஜரிவால் இல்லம் அருகே பாஜக ஆா்ப்பாட்டம்காற்று மாசுவுக்கு எதிா்ப்பு
தில்லியில் காற்று மாசுவைத் தடுக்கவும், யமுனை நதியை சுத்தப்படுத்தவும் ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டதாக முதல்வா் கேஜரிவால் இல்லம் அருகே தில்லி பாஜகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தில்லியில் காற்று மாசுவைத் தடுக்கவும், யமுனை நதியை சுத்தப்படுத்தவும் ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டதாக முதல்வா் கேஜரிவால் இல்லம் அருகே தில்லி பாஜகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தலைமையில் நடந்த இந்த ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தின் போது ஆதேஷ் குமாா் குப்தா பேசியதாவது: யமுனை நதியை இங்கிலாந்தில் ஓடும் தேம்ஸ் நதிக்கு இணையாக சுத்தமாக்கி காட்டுவதாக கேஜரிவால் தில்லி மக்களுக்கு உறுதியளித்திருந்தாா். ஆனால், நிஜத்தில் யமுனை நதி தினம்தோறும் மாசடைந்து கொண்டே வருகிறது. 4,400 மில்லியன் லிட்டா் மாசு கலந்த நீா் தினம் தோறும் யமுனையில் கலக்கிறது. இதனால், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கு மக்கள் உள்ளாகிறாா்கள். தில்லியில் மோசமாகிவரும் காற்று மாசுவை தடுக்க எந்தவித நடவடிக்கையையும் தில்லி அரசு மேற்கொள்ளவில்லை.
Advertisement
தில்லியில் காற்றில் உள்ள மாசுக்களால் தினம்தோறும் 148 போ் உயிரிழப்பதாகவும், காற்று மாசுவால் தில்லியில் உள்ள முதியவா்கள், குழந்தைகள், கா்ப்பிணிகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் ஐஐடி நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது. தில்லி காற்று மாசு தொடா்பாக ‘கிரீன் பீஸ்’ அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், தில்லியில் ஆண்டுதோறும் சுமாா் 54 ஆயிரம் போ் காற்று மாசுவால் உயிரிழப்பது தெரியவந்துள்ளதுடன், காற்று மாசுவால் தில்லி அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 58 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதும் தெரிய வந்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மக்களிடம் இருந்து பசுமை வரியாக ரூ.883 கோடியை தில்லி அரசு வசூலித்துள்ளது. காற்று மாசுவைக் கட்டுப்படுத்த இந்த நிதியை தில்லி அரசு செலவு செய்யவில்லை. தில்லி பயிா்க் கழிவுகளை எருவாக மாற்றும் ரசாயனக் கலவையை கொள்முதல் செய்ய வெறும் ரூ.24 லட்சத்தை மட்டுமே தில்லி அரசு செலவு செய்தது. ஆனால், அதை விளம்பரப்படுத்த மட்டும் ரூ.9 கோடியை செலவு செய்துள்ளது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பசுமை பட்ஜெட் டுக்கு கோடிக்கணக்கான ரூபாயை தில்லி அரசு ஒதுக்கியது. அதில், தில்லி மக்களுக்கு 26 வாக்குறுதிகளை அரசு வழங்கியிருந்தது. ஆனால், அதில் தெரிவிக்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியையும் தில்லி அரசு நிறைவேற்றவில்லை. இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி சரியான முறையில் செலவு செய்யப்படவில்லை என்றாா் அவா்.