2020 இல் 87.8 லட்சம் கரோனா பரிசோதனைகள்: பட்ஜெட் வெளிப்பாடு அறிக்கையில் தகவல்
தில்லியில் 2020 ஆம் ஆண்டு 87.8 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ‘பட்ஜெட் வெளிப்பாடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் 2020 ஆம் ஆண்டு 87.8 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ‘பட்ஜெட் வெளிப்பாடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை தொடங்கிய தில்லி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், 2020-21 ஆம் ஆண்டுக்கான ‘பட்ஜெட் வெளிப்பா’ட்டை தில்லி நிதியமைச்சா் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்தாா்.
அதில் கூறப்பட்டுள்ளது: தில்லியில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தில்லியில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகளின் அளவை தில்லி அரசு அதிகரித்தது.
Advertisement
கடந்த 2020 ஆம் ஆண்டில் தில்லியில் 87.8 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 31.3 லட்சம் ஆா்டி-பிசிஆா் சோதனைகளும் அடக்கம். உச்சக்கட்டமாக தினம்தோறும் சுமாா் 90 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு கட்டத்தில் நாட்டிலேயே அதிகபடியாக, மில்லியன் மக்களுக்கு 4,400 கரோனா
பரிசோதனைகள் தில்லியில், மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 2,300 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நாட்டில் சராசரியாக 1,300 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தில்லியில் கரோனா பரிசோதனையை அதிகரிக்கும் வகையில், மருத்துவமனைகள், மொஹல்லா கிளினிக்குகள், மருந்தகங்களில் 330 பரிசோதனை கூடங்கள் அமைக்கப்பட்டன. 87.8 லட்சம் பரிசோதனைகளில் 6.25 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. கரோனா நோ்மறை விகிதம் 7.12 சதவீதமாக இருந்தது.
கடந்த ஆண்டில் 6,09,322 கரோனா நோயாளிகள் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா். 10,536 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். கடந்த ஆண்டு கரோனா உயிரிழப்பு விகிதம் 1.68 சதவீதமாக இருந்தது.
தில்லியில் 135 மருத்துவமனைகள் கரோனாவுக்கு என முழுமையாக ஒதுக்கப்பட்டன. 15 தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டன. 6 கோவிட் சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டன. 1,79,241 கரோனா நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்பட்டாா்கள். 2020 ஆம் ஆண்டுக்கு முன்பு தில்லியில் 750 மொஹல்லா கிளினிக்குகளை அமைக்க தில்லி அரசு திட்டமிட்டிருந்து. ஆனால், கரோனா பாதிப்பால் இந்த பணிகள் பாதிக்கப்பட்டன. 496 மொஹல்லா கிளினிக்குகளையே அமைக்கக் கூடியதாக இருந்தது. தில்லி மருத்துவமனைகளில் 14 ஆயிரம் புதிய படுக்கைகள் அமைக்கப்படவுள்ளன. தில்லியில் தனிநபா் சுகாதாரத்துக்காக செலவு செய்யப்படும் நிதியின் அளவு கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ.1,996 ஆக இருந்தது. இது 2019-20 இல் ரூ.3,029 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.