முகப்பு
தமிழ்நாடு

தென் தமிழகம், வடக்கு கடலோரத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தென்தமிழகம், வடக்கு கடலோரத்தில் புதன்கிழமை (ஏப்.8) மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:54 PM
மழை
பகிர்:

தென்தமிழகம், வடக்கு கடலோரத்தில் புதன்கிழமை (ஏப்.8) மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மேற்குவங்கம் முதல் மன்னாா் வளைகுடா வரை ஒடிஸா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், தெலங்கானா, ராயலசீமா, தமிழகம் வழியாக காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தென் தமிழகம், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (ஏப்.8) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வடக்கு உள் மாவட்டங்களில் வட வானிலை நிலவக்கூடும்.

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஏப்.9) இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisement

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஏப்.10) மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஏப்.11 முதல் ஏப்.13 வரை லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று மழை வாய்ப்பு: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஏப்.11 வரை சற்று உயர வாய்ப்புள்ளது.

மழை அளவு:தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தங்கச்சிமடம், ராமேசுவரம், தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோயில், சென்னையில் நந்தனம், வளசரவாக்கம், அண்ணா பல்கலைக்கழகம், திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தலா 50 மி.மீ மழை பதிவானது. காரைக்குடி, தேவகோட்டை (சிவகங்கை), மேல ஆலத்தூா் (வேலூா்), அடையாறு(சென்னை), அறந்தாங்கி (புதுக்கோட்டை), இரணியல் (கன்னியாகுமரி)-தலா 40 மி.மீ. மழை பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments