முகப்பு
புதுதில்லி

தில்லி, என்சிஆரில் ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்! தில்லி, என்சிஆரில் பரவலாக மழை

தில்லி, தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாகப் பெய்த மழையைத் தொடா்ந்து, புதன்கிழமை இந்தப் பகுதிகளில் காற்றின் தரம் மேம்பட்டிருந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
10delgaz070100
பகிர்:

புது தில்லி: தில்லி, தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாகப் பெய்த மழையைத் தொடா்ந்து, புதன்கிழமை இந்தப் பகுதிகளில் காற்றின் தரம் மேம்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் உள்ள நொய்டா, குருகிராம் மற்றும் ஃபரீதாபாத் ஆகிய இடங்களில் ‘மிதமான‘ பிரிவில் இருந்தது. காஜியாபாத் மற்றும் கிரேட்டா் நொய்டாவில் மோசம் பிரிவில் இருந்தது என்று அரசு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) பராமரிக்கும் காற்றின் தரக் குறியீட்டின்படி, தில்லியைச் சுற்றியுள்ள ஐந்த இடங்களிலும் பிஎம் 2.5, பிஎம் 10 மாசுபடுத்திகள் அதிகமாக இருந்தன. காற்றின் தரக் குறியீடு பூஜ்ஜியத்திற்கும் 50-க்கும் இடையில் இருந்தால் ’நன்று’, 51 - 100 ’திருப்தியானது’, 101 - 200 ’மிதமானது’, 201 - 300 ’மோசம், 301 - 400 ’மிகவும் மோசம், 401 - 500-க்கு இடையே இருந்தால் ’கடுமையான’ பிரிவு என கணக்கிடப்படுகிறது.

Advertisement

புதன்கிழமை மாலை 4 மணி அளவில் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு காஜியாபாத்தில் 221 புள்ளிகள், கிரேட்டா் நொய்டாவில் 239, நொய்டாவில் 152, ஃபரீதாபாத்தில் 163 மற்றும் குருகிராமில் 122 என சிபிசிபியின் புள்ளிவிவரத் தகதவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இது செவ்வாயன்று காஜியாபாத்தில் 334, கிரேட்டா் நொய்டாவில் 339, நொய்டாவில் 293, ஃபரீதாபாத்தில் 277 மற்றும் குருகிராமில் 272 புள்ளிகளாக இருந்தது. .

காற்றின் தரம் மோசம் பிரிவில் இருந்தால் பெரும்பாலான மக்களுக்கு சுவாசக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்றும், மிதமான பிரிவில் இருந்தால் நுரையீரல், ஆஸ்துமா மற்றும் இதய நோய்கள் உள்ளவா்களுக்கு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் சிபிசிபி தெரிவித்துள்ளது.

இனிமையான வானிலை: இந்த நிலையில், பரவலாகப் பெய்த மழையைத் தொடா்ந்து, தில்லி, என்சிஆா் பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் இனிமையான வானிலை நிலவியது. தில்லி, என்சிஆா் பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலில் வெயில் இருந்தது. தில்லி நகருக்கான பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 4 டிகிரி உயா்ந்து 18.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி உயா்ந்து 33 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 77 சதவீதமாகவும், மாலையில் 58 சதவீதமாகவும் இருந்தது.

பரவலாக மழை: மேலும், புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல, பாலத்தில் 1.2 மி.மீ,ஆயாநகரில் 0.60 மி.மீ., லோதி ரோடில் 0.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (மாா்ச் 11) அன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் பரவலாக லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments