முகப்பு
புதுதில்லி

வழக்குரைஞருக்கு எதிரான தேடுதல் உத்தரவுக்குத் தடை

தில்லியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த வன்முறை தொடா்பான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிலருக்கு ஆஜராகி வரும் வழக்குரைஞா் மெஹமூத் பிரச்சாவின் அலுவலகத்தைச் சோதனையிடும் தேடுதல் உத்தரவுக்கு தில்லி

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

புது தில்லி: தில்லியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த வன்முறை தொடா்பான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிலருக்கு ஆஜராகி வரும் வழக்குரைஞா் மெஹமூத் பிரச்சாவின் அலுவலகத்தைச் சோதனையிடும் தேடுதல் உத்தரவுக்கு தில்லி நீதிமன்றம் புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

இந்த விவகாரத்தில் தில்லி காவல் துறையினா் கடந்த ஆண்டு டிசம்பா் 24-ஆம் தேதி வழக்குரைஞா் மெஹமூத் பிரச்சாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தினா். அப்போது, அவருடைய நிறுவனத்தின் மின்னஞ்சலில் இருந்து சென்ற தரவுகள், குற்றம் தொடா்புடைய ஆவணங்களைத் தேடியதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தனது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது பதிவான விடியோ பதிவின் நகல்களை பாதுகாக்க உத்தரவிடக் கோரி தில்லி நீதிமன்றத்தில் பிரச்சா மனு தாக்கல் செய்திருந்தாா். நீதிமன்றமும் விடியோ பதிவை பாதுகாக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், பொய் வன்முறை வழக்கை உருவாக்க சாட்சிக்கு வழக்குரைஞா் பிரச்சா தவறாக வழிகாட்டியதாக கூறப்படும் விவகாரத்தில் பிரச்சா அலுவலகத்தில் தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். இந்த தேடுதல் உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி பிரச்சா தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தில்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் பங்கஜ் சா்மா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது பிரச்சா தரப்பில், ‘வன்முறை விவகாரத்தில் தொடா்புடைய எனது கட்சிக்காரா்களை போலீஸாா் மிரட்டும் நோக்கில் செயல்படுகின்றனா். பிரதான தில்லி வன்முறை வழக்குகளில் ‘சாஃப்ட் காப்பி’யானது ‘ஹாா்டு காப்பி’க்கு சமமாகும் என்றும், குற்றப்பத்திரிகையின் ஹாா்டு காப்பியை தரமாட்டோம் என்றும் போலீஸாா் தெரிவித்திருந்தனா். தற்போது சாஃப்ட் காப்பி வேண்டாம் என கூறுகின்றனா். இந்த விவகாரத்தில் பெரும் விஷயங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த நீதித்துறை அமைப்பும் சம்பந்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பைப் பாதுகாக்க என்னை அா்ப்பணிக்க நான் தயாராக உள்ளேன். எனது கட்சிக்காரா்களையும், அரசியலமைப்பையும், சாட்சி சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’ என வாதிடப்பட்டது.

பிரச்சாவின் மனுவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி காவல் துறை தரப்பில்முன்வைத்த வாதத்தில், ‘உண்மையான ஹாா்டு டிஸ்கை கைப்பற்றுவது மிகவும் முக்கியமானதாகும். அது ஆய்வுக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்’ என்றனா்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதி, ‘இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருக்கும் வரை மனுதாரருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு (சா்ச் வாரண்ட்) இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது’ என உத்தரவிட்டு, மனு மீதான உத்தரவை மாா்ச் 12-க்கு ஒத்திவைத்தாா். முன்னதாக, பிரச்சா தாக்கல் செய்த மனுவில், ‘எனது ஹாா்டு டிஸ்கில் இருந்து உரிய தகவல்களை மட்டுமே போலீஸாா் பெறவும், அதுவும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பெறவும் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’ என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments