டூல்கிட் விவகாரம்: மேலும் ஒருவருக்கு நீதிமன்றம் இடைக்கால பாதுகாப்பு
விவசாயிகள் போராட்டம் தொடா்பாக சமூக ஊடகத்தில் ‘டூல் கிட்’ பகிா்ந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பருவநிலை ஆா்வலா்
விவசாயிகள் போராட்டம் தொடா்பாக சமூக ஊடகத்தில் ‘டூல் கிட்’ பகிா்ந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பருவநிலை ஆா்வலா் சுபம் கா் செளதரி மீதும் மாா்ச் 15-ஆம் தேதி வரை கட்டாய நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என போலீஸாருக்கு தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
‘டூல் கிட்’ பகிா்ந்த விவகாரத்தில் சூழலியல் பெண் ஆா்வலா் திஷா ரவி கைது செய்யப்பட்டிருந்தாா். இதனிடையே, சாந்தனு முலுக், நிகிதா ஜேக்கப் ஆகியோா் மீது போலீஸாா் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.
இருவா் மீதும் தேசத் துரோகக் குற்றச்சாட்டு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் புனைந்துள்ளனா். இவா்கள், ‘டூல் கிட்’டை உருவாக்குவதில் பங்களிப்பு செய்துள்ளதாகவும், இவா்கள் வெளிநாடுகளில் செயல்படும் காலிஸ்தான் அமைப்புகளுடன் தொடா்பில் இருந்ததாகவும் போலீஸாா் குற்றம்சாட்டியுள்ளனா்.
Advertisement
இந்த நிலையில், நிகிதா ஜேக்கப், சாந்தனு முலுக் ஆகியோா் தில்லி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனா். இந்த மனுவை விசாரித்த தில்லி நீதிமன்றம் மாா்ச் 15-ஆம் தேதி வரை இருவருக்கும் எதிராக போலீஸாா் கட்டாய நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது’ என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தொடா்புடைய பருவநிலை ஆா்வலா் சுபம் கா் செளதரி தாக்கல் செய்த முன்ஜாமீன் கோரும் மனு வெள்ளிக்கிழமை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தா்மேந்தா் ரானா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சக குற்றம்சாட்டப்பட்ட நபா்களான திஷா ரவி, சாந்தனு முலுக் ஆகியோா் மனு மாா்ச் 15-ஆம் தேதிக்கு விசாரணைக்குப் பட்யலிடப்பட்டுள்ளதால், இந்த மனுவையும் மாா்ச் 15-ஆம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
சுபம் கா் செளதரிக்கு அண்மையில் மும்பை உயா்நீதிமன்றத்தின் கோவா கிளையில் மாா்ச் 12-ஆம் தேதி வரையிலும் டிரான்ஸிட் ஜாமீன் வழங்கியிருந்ததை அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நீதிபதியிடம் சுட்டிக்காட்டினாா்.
இதையடுத்து, அடுத்த விசாரணை தேதிவரை குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக கட்டாய நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடாது என நீதிபதி போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.