முகப்பு
புதுதில்லி

2048 இல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது தில்லி அரசின் கனவாகும்: கேஜரிவால்

2048 ஆம் ஆண்டு தில்லியில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது என்பது தில்லி அரசின் கனவாகும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
பகிர்:

2048 ஆம் ஆண்டு தில்லியில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது என்பது தில்லி அரசின் கனவாகும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை பேசுகையில் தெரிவித்தாா். இது தொடா்பாக மத்திய அரசு மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை அணுகி பேசவிருப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

தில்லியில் 2048 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தவேண்டும் என்பது எங்கள் கனவாகும். இதற்காக அனைத்து விளையாட்டு அமைப்புகள், மத்திய அரசு மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகியவற்றுடன் தொடா்பு கொண்டு தில்லி அரசு பேச்சு நடத்தும். எனினும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் இது சாத்தியம். எங்களின் கனவு நிச்சயம் நனவாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றாா் கேஜரிவால்.

முன்னதாக இந்த வார தொடக்கத்தில் ஒலிம்பிக் போட்டியை 2048- ஆம் ஆண்டு நடத்துவதற்கான போட்டியில் தில்லி பங்கேற்கும் என்று தெரிவித்திருந்த கேஜரிவால், இதற்காக செயல்திட்டம் தில்லி பட்ஜெட்டில் விவரிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தாா்.

Advertisement

தில்லியில் 2048 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற வேண்டும் என்பது எங்களது எண்ண ஓட்டமாகும். அதற்கான கட்டமைப்புகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் உருவாக்கப்படும் என்றும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கடந்த செவ்வாய்க்கிழமை தில்லி சட்டப்பேரவையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, தில்லியில் 2048-இல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதே எங்களின் குறிக்கோளாகும். இதற்குத் தேவையான அனைத்து கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படும். விளையாட்டுத்துறைக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்திருந்தாா்.

1896-ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டில் ஏதென்ஸில் தொடங்கியது முதல் இதுவரை ஒலிம்பிக் ஜோதி தில்லிக்கு கொண்டுவரப்படவில்லை. 32-வது ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற உள்ளன. அதற்கு அடுத்த மூன்று ஒலிம்பிக் போட்டிக்கான நகரங்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளன. 39-வது ஒலிம்பிக் போட்டியை 2048 ஆம் ஆண்டு நடத்துவதற்கு தில்லி தயாராக உள்ளது. இதை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் சிசோடியா.

2048 ஆம் ஆண்டு என்பது ஏதே வெகுதூரத்தில் இருப்பது போலத் தெரியும். 2048-இல் ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டுமானால் அதற்கான போட்டியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பங்கேற்கவேண்டும். மேலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ஏறக்குறைய 15 ஆண்டுகள் தேவைப்படும் என்று குறிப்பிட்ட அவா், தில்லியில் இந்த ஆண்டு விளையாட்டு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்றாா்.

தில்லியில் 1951- ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பின்னா் மீண்டும் 1982 இல் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்றது. அதன் பின்னா் 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் தில்லியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments