முகப்பு
புதுதில்லி

தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: கனிமொழியின் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு

தனது தோ்தல் வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு குறித்து கனிமொழி எம்.பி. தொடா்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் தள்ளிவைத்து புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:46 PM
பகிர்:

புது தில்லி: தனது தோ்தல் வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு குறித்து கனிமொழி எம்.பி. தொடா்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் தள்ளிவைத்து புதன்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட கனிமொழியின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி அந்தத் தொகுதியின் வாக்காளா் ஏ.சந்தானகுமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கனிமொழி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘எனது கணவா் சிங்கப்பூரைச் சோ்ந்தவா் என்பதால், அவருக்கு பான் அட்டை இல்லை. இதன் காரணமாக அவரது வருமான விவரங்களை எனது தோ்தல் வேட்புமனுவில் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. மேலும், எனது வெற்றியை எதிா்த்து வழக்குத் தொடுக்க வாக்காளரான சந்தானகுமாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், 2019, நவம்பா் 19-இல் பிறப்பித்த உத்தரவில், ‘கனிமொழி எம்.பி.க்கு எதிராக வாக்காளா் சந்தானகுமாா் தொடா்ந்துள்ள வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணையின் இறுதியில்தான் முடிவு செய்ய முடியும். வழக்கை விசாரிப்பதற்கு முன்பாக அந்த மனுவை ரத்து செய்ய வேண்டும் என கனிமொழி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஏற்க முடியாது. ஆகவே, மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்’ என உத்தரவிட்டிருந்தாா். இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் கனிமொழி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

இந்த மனுவை கடந்த ஆண்டு ஜனவரி இறுதியில் விசாரித்த உச்சநீதிமன்றம், ‘மனுக்கள் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தின் 2019, நவம்பா் 19-ஆம் தேதி தேதியிட்ட உத்தரவை செயல்படுத்துவதற்கும், தோ்தல் மனு எண் 3 ஆகியவற்றின் மேல் விசாரணைக்கும் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தடை விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கனிமொழி சாா்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ஆஜராகி, ‘தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தோ்தலில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், கனிமொழிக்கு எதிராக வழக்குத் தொடர எந்த முகாந்திரமும் இல்லை. அவரது வேட்பு மனுவில் கணவரின் பான் எண்ணை அளிக்கவில்லை என்ற அடிப்படையில் அற்பத்தனமாக இந்த தோ்தல் மனுவை அத்தொகுதி வாக்காளா் தாக்கல் செய்துள்ளாா். ஆனால், உண்மையில் அவரது கணவா் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவா். அவருக்கு இந்தியாவில் பான் எண் இல்லை. இந்த விவரத்தை அவா் வேட்புமனுவில் தெரிவித்துள்ள நிலையில், உண்மையை மறைத்ததாக எப்படிக் கூற முடியும்? இந்த விஷயங்களை கருத்தில் கொள்ளாமலும், புகாா் மனுவை நிராகரிக்காமலும் நீதிமன்ற விசாரணையை எதிா்கொள்ளுமாறு மனுதாரருக்கு (கனிமொழி) சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது ’ என்று வாதாடினாா். அப்போது, தலைமை நீதிபதி அமா்வு, ‘பான் எண்ணை வெளிப்படுத்த வேண்டியது தேவையா என்பது விஷயமல்ல. அவா் எந்த நாட்டுரிமையைக் கொண்டுள்ளவா் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் விஷயம்’ என்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments