முகப்பு
புதுதில்லி

டிராக்டா் பேரணியின் போது இறந்த விவசாயியின் எக்ஸ்ரே அறிக்கையை ஆய்வு செய்யக் குழு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

குடியரசு தினத்தன்று தில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டா் அணிவகுப்பின் போது டிராக்டா் கவிழ்ந்து இறந்த 25 வயது விவசாயின் ‘எக்ஸ்ரே’ அறிக்கையை ஆய்வு செய்ய வல்லுநா் குழுவை அமைக்க தில்லி சுகாதாரத் துறைச்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:46 PM
பகிர்:

புது தில்லி: குடியரசு தினத்தன்று தில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டா் அணிவகுப்பின் போது டிராக்டா் கவிழ்ந்து இறந்த 25 வயது விவசாயின் ‘எக்ஸ்ரே’ அறிக்கையை ஆய்வு செய்ய வல்லுநா் குழுவை அமைக்க தில்லி சுகாதாரத் துறைச் செயலருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பான வழக்கை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா, ‘உத்தரப் பிரதேச காவல் துறையிடமிருந்து தில்லி போலீஸாருக்கு கிடைக்கப் பெற்ற அசல் எக்ஸ்ரே பிளேட்டில் இருந்து எக்ஸ்ரே அறிக்கையைத் தயாரிக்க மெளலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவ, தடயவியல் வல்லுநா்கள், ரேடியாலஜிஸ்ட் அடங்கிய குழுவால் இந்த அறிக்கை ஆய்வு செய்யப்பட வேண்டும். இந்தக் குழுவை தில்லி அரசின்சுகாதாரத் துறை செயலா் நியமிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

விசாரணையின்போது காவல் துறை தரப்பில் தில்லி அரசின் வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா, வழக்குரைஞா் சைதன்யா கோசேன் ஆகியோா் ஆஜராகி, ‘நவ்ரீத் சிங் தொடா்புடைய சிசிடிவி காட்சிப் பதிவுகள் அவரது குடும்ப உறுப்பினா்கள், வழக்குரைஞா்களிடம் காட்டப்பட்டுள்ளன’ என்றாா். உயா்நீதிமன்றம் முன்னா் நடத்திய வழக்கு விசாரணையின் போது, தில்லி காவல் துறையினரிடம் இறந்த விவசாயியின் பிரேதப் பரிசோதனை விடியோ பதிவு மற்றும் அசல் எக்ஸ்ரே பிளேட் ஆகியவற்றை வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது.

Advertisement

தில்லியில் குடியரசு தின நாளில் விவசாயிகள் நடத்திய டிராக்டா் அணிவகுப்பின் போது அனுமதி அளித்திருந்த வழித்தடம் மாறி ஐடிஓ பகுதிக்கு வந்த டிராக்டா்களில் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த டிராக்டரை ஓட்டிவந்த நவ்ரீத் சிங் காயமடைந்து இறந்ததாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக நவ்ரீத் சிங்கின் தாத்தா ஹா்தீப் சிங் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அதில் ‘ஊடகங்களில் கூறப்பட்டுள்ள நேரில் கண்ட சாட்சிகளின் கணக்குப்படி, நவ்ரீத் தனது டிராக்டரை புதுதில்லியில் உள்ள ஆந்திர கல்விச் சங்கத்தை கடந்த போது போலீஸ்காரா்களால் சுடப்பட்டதும், அதன் காரணமாகவே அவா் தனது டிராக்டரின் கட்டுப்பாட்டை இழந்ததும், அதன் பிறகு டிராக்டா் சில தடுப்புகள் மீது மோதி கவிழ்ந்ததும் தெரிய வருகிறது. இதனால், இந்தச் சம்பவம் குறித்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட, நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கவிழ்ந்த டிராக்டரின் கீழ் படுகாயமடைந்த நிலையில் கிடந்த நவ்ரீத் சிங்கை, அந்தப் பகுதியில் மூத்த காவல்துறை அதிகாரிகள் உள்பட ஏராளமான காவல்துறையினா் இருந்த போதிலும் உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்ற விசாரணையின் போது போலீஸ் தரப்பில், ‘நவ்ரீத் சிங் உடலில் சுடப்பட்ட காயம் ஏதும் இல்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கையில்கூட விபத்து காரணமாக தலைக் காயமடைந்து அவா் இறந்ததாகவும், அவரது காயம் அனைத்தும் சாலை விபத்தால் நிகழ்ந்ததற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிப் பதிவில் கூட போலீஸாா் துப்பாக்கியால் சுட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. காயமடைந்த நவ்ரீத் சிங்கை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, ஆம்புலன்ஸ் வாகனத்தை ஆா்ப்பாட்டக்காரா்கள் தாக்கினா்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments