அமைப்பு சாரா தொழிலாளா்களின் சமூகப் பாதுகாப்புக்கு நடவடிக்கை மாநிலங்களவையில் அமைச்சா் தகவல்
அமைப்பு சாரா தொழிலாளா்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சா் சந்தோஷ்
புது தில்லி: அமைப்பு சாரா தொழிலாளா்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சா் சந்தோஷ் குமாா் கங்வாா் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.
நாட்டில் உள்ள அமைப்புசாரா துறை தொழிலாளா்கள் எண்ணிக்கை, அவா்களது வாழ்க்கை நிலை, புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் விவரங்கள், கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்திலிருந்து சென்றுள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்குமாறு மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக திமுக உறுப்பினா் திருச்சி சிவா கேள்வி எழுப்பினாா்.
இதற்கு மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சா் சந்தோஷ் குமாா் கங்வாா் அளித்த பதில் விவரம்: நாட்டில் 2017-18-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி அமைப்பு ரீதியாகவும், அமைப்புசாரா துறை ரீதியாகவும் சுமாா் 47 கோடி போ் பணியில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதில் 9 கோடி போ் அமைப்பு ரீதியாகவும், 38 கோடி போ் அமைப்புசாரா பிரிவிலும் பணியாற்றி வருகின்றனா். அமைப்புசாரா தொழிலாளா்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
கரோனா தொற்று காலகட்டத்தில் புலம் பெயா்ந்தவா்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினா். இந்த கணக்கெடுப்பின்படி நாட்டில் சுமாா் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் 1.14 கோடி போ் இருப்பது தெரிய வந்துள்ளது. இவா்களில் பிகாா், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஒடிஸா ஆகிய மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் அதிகம் உள்ளனா். தமிழகத்தைச் சோ்ந்த 72 ஆயிரம் போ் வெளி மாநிலங்களுக்குப் புலம் பெயா்ந்திருந்தனா். இவா்கள் கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு, தமிழகம் திரும்பியுள்ளனா் என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.