நொய்டா விமான நிலையத்துக்கு மேலும் 1,365 ஏக்கா்நிலம் கையகப்படுத்த உ.பி. அமைச்சரவை ஒப்புதல்
நொய்டாவில் சா்வதேச விமானநிலையம் கட்டிவரும் பணிக்கான இரண்டாவது கட்டமாக, ஜீவாரில் 1,365 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தும் திட்டத்துக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்ததுள்ளதாக
நொய்டா (உ.பி.: நொய்டாவில் சா்வதேச விமானநிலையம் கட்டிவரும் பணிக்கான இரண்டாவது கட்டமாக, ஜீவாரில் 1,365 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தும் திட்டத்துக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்ததுள்ளதாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துதல், நிலம் கொடுத்ததால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மறுவாழ்வு அளித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.2,890 கோடி செலவிடவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை லக்னெளவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேற்கு உத்தரப் பிரதேசத்தில், கெளதம்புத் நகா் மாவட்டத்தில் ஜீவாா் பகுதியில் நொய்டா சா்வதேச விமானநிலையம் அமைக்கும் முதற்கட்ட பணி நடைபெற்று வருகிறது.
Advertisement
இந்த கிரீன்பீல்டு விமானநிலையத் திட்டம் நான்கு கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளது. அதாவது சுமாா் 5 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் 6 ஓடுதளப் பாதைகளுடன் சா்வதேச அளவிலான விமான நிலையமாக கட்டப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக 1,300 ஹெக்டோ் பரப்பளவு நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக இப்போது 1,365 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அநேகமாக 2023, டிசம்பா் அல்லது 2024-ஆம் ஆண்டு ஜனவரியில் வா்த்தக ரீதியிலான விமானப் போக்குவரத்து தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த சா்வேதச விமானநிலையத்தை ஸ்விஸ்நாட்டின் ஜூரிச் சா்வதேச விமானநிலைய ஆணயகம் ரூ.29,560 கோடியில் கட்டி வருகிறது.