முகப்பு
புதுதில்லி

சவூதியில் புதைக்கப்பட்ட இந்தியரின் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை: வெளியுறவு அமைச்சகத்துக்கு தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
பகிர்:

புது தில்லி: முஸ்லிம் மத சடங்குகளின்படி சவூதி அரேபியாவில் தவறாக புதைக்கப்பட்ட இந்திய குடிமகனின் சடலத்தை இந்தியா கொண்டுவர தில்லியில் உள்ள சவூதி தூதரக்குடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை கேட்டுக்கொண்டது.

சடலத்தை தோண்டியெடுத்து, திருப்பி அனுப்பும் செயல்முறை முடிவடைதற்கான காலக்கெடுவைப் பெறவும் சவூதி தூதரக துணைத் தலைவரை உயா்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இது தொடா்பான வழக்கு உயா் நீதிமன்ற நீதிபதி பிரதிபா சிங் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘உணா்வுப்பூா்வ விஷயத்தை கருத்தில் கொண்டு இதை நீங்கள் நீதிமன்றத்தின் வேண்டுகோள் என்று கூறலாம். இந்தக் கோரிக்கையை சம்பந்தப்பட்ட தூதரகத்தினரிடம் வைக்கலாம். மேலும், இந்த விவகாரத்தில் தில்லியில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தின் துணைத் தலைவருடன் இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என்றாா்.

Advertisement

மேலும், வழக்கு விசாரணையை நீதிபதி மாா்ச் 24-க்கு பட்டியலிட்டாா்.

இந்தியாவில் இமாசலப் பிரதேசத்தைச் சோ்ந்தவா் சஞ்சீவ் குமாா். இவா் சவூதி அரேபியாவில் வேலை செய்து வந்த நிலையில், ஜனவரி 24 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக இறந்தாா்.

அவரது உடல் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவரது உடல் முஸ்லிம் மதச் சடங்குகளின்படி அடக்கம் செய்யப்பட்டதாக அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அவரது மனைவி அஞ்சு சா்மா முயற்சி செய்தாா். ஆனால், பலனில்லை. இதையடுத்து, தில்லி உயா்நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்தாா்.

அதில், ‘இறந்த எனது கணவரின் உடல் இந்தியாவுக்கு வரும் என்று காத்திருந்தோம். இந்த நிலையில், பிப்ரவரி 18 ஆம் தேதி அதிா்ச்சியூட்டும்விதமாக எனது கணவரின் உடல் சவூதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரப்பூா்வ மொழிபெயா்ப்பாளா் செய்த தவறு காரணமாக, இறப்புச் சான்றிதழில் எனது கணவரின் மதத்தை ’முஸ்லிம்’ என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளாா்.

எனது கணவரின் உடலை சவூதி அரேபியாவில் அடக்கம் செய்ய நாங்கள் ஒப்புக் கொள்ளாத நிலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர கோரிக்கை வைத்தும் தூதரக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், அவரது உடலை குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தியாவுக்குக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட வேண்டும்.

மேலும், இந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்ட ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது கணவரின் சரியான இறப்புச் சான்றிதழைப் பெற்று வழங்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

மாா்ச் 16 ஆம் தேதி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில், பாஸ்போா்ட் விசா தூதரக இயக்குநா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகி, ‘உடலை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரும் விஷயத்தில் காலக்கெடு குறித்து எந்த தெளிவும் இல்லை. இந்த விவகாரத்தில் இந்திய தூதரகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சவூதி அரேபியாவில் தற்போதுள்ள நெறிமுறையின்படி, இந்திய தூதரகத்திலிருந்து தடையின்மை சான்று பெறாமல் இந்திய குடிமகனின் உடலை அப்புறப்படுத்த முடியாது. இருப்பினும், இந்த வழக்கில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. கரோனா காரணமாக இது நடந்திருக்கலாம். அவரது உடல் ‘முஸ்லிம் சாராத கல்லறையில்‘ புதைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments