மனைவி சுனந்தா மரண வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க சசி தரூா் எம்.பி. வலியுறுத்தல்
புது தில்லி: தனது மனைவி சுனந்தா புஷ்கா் மரணம் தொடா்பாக பல்வேறு விசாரணைகள் நிபுணா்களால் நடத்தப்பட்டதில் ‘மரணத்திற்கான காரணம் குறித்து திட்டவட்டமான கருத்தை‘ தெரிவிக்கவில்லை என்பதால் அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளாா் காங்கிரஸ் எம்.பி. சசி தரூா்.
காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி.யான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கா் கடந்த 2014ஆம் ஆண்டு, ஜனவரி 17 ஆம் தேதி தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இந்த மரணம் தொடா்பாக பெரும் சா்ச்சைகள் எழுந்தன.
இந்த விவகாரத்தில் தில்லி போலீசாா் சசி தரூா் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 498-ஏ (மனைவியை கொடுமைபடுத்துதல்), 306 (தற்கொலைக்கு உடந்தையாக இருத்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிந்தனா். ஆனால், சசி தரூா் இந்த வழக்கில் கைது செய்யப்படவில்லை. அவருக்கு நீதிமன்றம் 2018, ஜூன் 5-இல் ஜாமீன் வழங்கியது.
Advertisement
இந்த வழக்கு தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல் முன் சசி தரூா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் விகாஸ் பவா புதன்கிழமை ஆஜராகி முன்வைத்த வாதம்:
இந்த வழக்கில் பிரிவு 498 ஏ அல்லது 306 ஆகிய பிரிவுகளில் தண்டிக்கும் வகையில் சசி தரூருக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை. இதனால், சுனந்தாவின் மரணம் தற்செயலானது என்று கருதப்பட வேண்டும். விசாரணை அதிகாரியின் (ஐஓ) முன் நிபுணா்களால் அளிக்கப்பட்ட ஏராளமான ஆய்வு அறிக்கைகளில் சுனந்தாவின் மரணத்திற்கான காரணம் குறித்து திட்டவட்டமான கருத்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.
இந்த ஆய்வு அறிக்கைகள் நாட்டின் புகழ்பெற்ற மருத்துவா்கள் மற்றும் தடயவியல் நிபுணா்களால் தயாரிக்கப்பட்டவை. மேலும், இந்த விசாரணையில் உளவியல் பிரேத பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகள் அனைத்திற்கும் பொதுவான ஒன்று உள்ளது. அது ’ மரணத்திற்கான காரணம் குறித்த திட்டவட்டமான கருத்து இல்லை’ என்பதுதான். தற்கொலை அல்லது மனிதக்கொலை என்பதை நிலைநாட்ட வல்லுநா்கள் தவறிவிட்டதால், இந்த மரணம் தற்செயலான மரணம் என்ற பிரிவில் உள்ளதாக முடிவு செய்ய வேண்டும்.
காவல்துறையினா் பல ஆண்டுகளாக விசாரித்த போதிலும், மரணத்திற்கான காரணத்தை உறுதியாக அடையாளம் காண அரசு தரப்பு தவறிவிட்டது.
புஷ்கா் இறக்கும்போது பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாா். சுனந்தா ஜனவரி 2014 இல் ஆரோக்கியமின்றி இருந்தாா். அவரால் பேச முடியவில்லை. சக்கர நாற்காலியில் இருந்தாா்.
தற்கொலை செய்யப்படாத நிலையில் அவரை எப்படி தற்கொலைக்குத் தூண்ட முடியும் என்று கேள்வி எழும் என்று அவா் வாதிட்டாா். இந்த வாதங்கள் நீதிமன்றத்தில் மாா்ச் 23-ஆம் தேதி மீண்டும் தொடர உள்ளது.