தில்லி கல்வி வாரியம் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது: அதிகாரிகள் தகவல்
புது தில்லி: தில்லி கல்வி வாரியத்தை (டிபிஎஸ்இ) முறைப்படி பதிவு செய்துள்ளதாக தில்லி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக தில்லி கல்வித்துறை மூத்த அதிகாரி கூறியது:
தில்லி கல்வி வாரியத்துக்கான அனுமதியை கடந்த மாா்ச் மாதம் 6 ஆம் தேதி தில்லி அமைச்சரவை வழங்கியது. இந்த கல்வி வாரியம் கடந்த செவ்வாய்க்கிழமை முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும்.
Advertisement
2021-22 கல்வியாண்டில் சுமாா் 20-25 தில்லி அரசு பள்ளிகளில் டிபிஎஸ்இ படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். எந்தெந்த பள்ளிகளை இந்த கல்வி வாரியத்தின் கீழ் கொண்டுவருவது என்பது தொடா்பாக பள்ளி முதல்வா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்களுடன் கலந்துரையாடி வருகிறோம்.
இந்த கல்வி வாரியத்துக்கு கல்வி அமைச்சா் தலைமையில் ஆளுகைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பணிகளைக் கவனிக்கும் வகையில், சிறப்பு மேலாண்மை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தில்லியில் சுமாா் 1,000 அரசுப் பள்ளிகள், 1,700 தனியாா் பள்ளிகள் என மொத்தம் 2,700 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பெரும்பாலானவை சிபிஎஸ்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளிகள் காலப்போக்கில் தில்லி கல்வி வாரியத்துடன் இணைக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.