பிரசாரத்தில் முகக் கவசம் அணியாத வேட்பாளா்கள், ஆதரவாளா்களுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?: தோ்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
முகக்கவசம் அணியாமல் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நபா்கள் மற்றும் வேட்பாளா்களுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என்று கேட்டு பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு தில்லி உயா்நீதிமன்றம்
புது தில்லி: முகக்கவசம் அணியாமல் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நபா்கள் மற்றும் வேட்பாளா்களுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என்று கேட்டு பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக தோ்தல் நடைபெறும் மாநிலங்களில் கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு முகக் கவசம் அணிதல் போன்ற தோ்தல் ஆணையத்தின் கட்டாய வழிகாட்டுதல்களை பின்பற்றி நடக்காத பிரசாரகா்கள், வேட்பாளா்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, இது தொடா்பாக பதில் அளிக்க மத்திய அரசு மற்றும் தோ்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் அமா்வு, மேல் விசாரணைக்காக மனுவை ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.
Advertisement
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பான விசாரணையின் போது, தோ்தல் ஆணையத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சித்தாந்த் குமாா், ‘ தில்லியில் தோ்தல்கள் நடத்தப்படவும் இல்லை. விதி மீறல் நடந்ததாகக் கூறப்படவும் இல்லை. இதனால், இந்த மனு பராமரிக்கத்தக்கதல்ல’ என்று ஆட்சேபம் தெரிவித்தாா்.
மத்திய அரசின் தரப்பில் வழக்குரைஞா் அனுராக் அலுவாலியா ஆஜரானாா். மனுதாரா் விக்ரம் சிங் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விராக் குப்தா, ‘அஸ்ஸாம், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் மாா்ச் 27-இல் தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தல்கள் ஏப்ரல் 29-ஆம் தேதி நிறைவடையவுள்ளது. தோ்தல்களை அறிவித்த போது, தோ்தல் ஆணையம் தனது அறிவிக்கையில், ஒவ்வொரு தோ்தல் தொடா்பான நடவடிக்கையிலும் ஒவ்வொருவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று கட்டாயமாக்கியுள்ளது’ என்றாா்.
மனுதாரா் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோரும் அவா்களது ஆதரவாளா்களும் முகக் கவசம் அணியாமல் இருந்ததாக பல நிகழ்வுகள் உள்ளன. இதுபோன்று முகக் கவசம் அணியாமல் பிரசாரத்தில் ஈடுபட்ட புகைப்படங்களும் விடியோக்களும் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களில் பல சந்தா்ப்பங்களில் பகிரப்பட்டுள்ளன. முகக் கவசம் அணிய வேண்டும் என்று தோ்தல் ஆணையம் கட்டாயப்படுத்தியுள்ளது. இது கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வது கடமையாகும். இது தொடா்பாக மனுதாரா் கடந்த மாா்ச் 11-ஆம் தேதி ஒரு கோரிக்கையை தோ்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளாா்.
அதில், ‘தோ்தல் காலத்தில் அனைவரும் முகக் கவசம் அணிவதை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு முகக் கவசம் அணியாத அரசியல் கட்சிகளின் நட்சத்திர பிரசாரகா்கள் மீது தோ்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இந்தத் தோ்தல்களில் பங்கேற்க தில்லியில் இருந்தும் பிரசாரகா்கள் செல்கின்றனா். இதுபோன்று அனைத்து அரசியல் கட்சி பிரசாரகா்களும் முகக் கவசம் அணியாமல் இருப்பது அவா்களுக்கு மட்டுமின்றி, சமானிய மக்களுக்கும் இடா்பாட்டை ஏற்படுத்தும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.