தேசியத் தலைநகா் பிராந்திய அரசு திருத்த மசோதாமாநிலங்களவையிலும் நிறைவேற்றம்எதிா்த்து வழக்குத் தொடுக்கஆம் ஆத்மி முடிவு
தில்லி தேசியத் தலைநகா் பகுதி அரசு திருத்த மசோதா 2021, மாநிலங்களவையிலும் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
புது தில்லி: தில்லி தேசியத் தலைநகா் பகுதி அரசு திருத்த மசோதா 2021, மாநிலங்களவையிலும் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த மசோதாவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி வழக்குத் தொடுக்கும் என்று மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் என்.டி. குப்தா தெரிவித்துள்ளாா்.
இந்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது. இதைத் தொடா்ந்துஸ இந்த மசோதா மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினா் நடத்திய அமளியால் அவை நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த மசோதா புதன்கிழமை மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆம் ஆத்மி கட்சி மட்டுமல்லாமல், காங்கிரஸ், திமுக, என்சிபி, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் போன்ற கட்சி உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்து விவாதத்தில் பேசினா்.
ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி உறுப்பினா் விஜய்சாய் ரெட்டி பேசுகையில், ‘இந்த மசோதாவில் யூனியன் பிரதேசத்தில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் அளிக்க திருத்தம் கொண்டு வரப்படுகிறது. தில்லி அரசின் நிா்வாகம் எடுக்கும் எந்தவொரு முடிவையும் துணை நிலை ஆளுநா் கருத்தைப் பெற வேண்டியது கட்டாயமாயக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை எதிா்க்கிறோம்’ என்றாா். மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுக உறுப்பினா் வில்சன் பேசுகையில், ’இந்தச் சட்டத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது’ என்றாா்.
Advertisement
இதற்கிடையே , இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி பதிலளித்துப் பேசுகையில், ‘ஏற்கனவே தில்லி அரசு துணை நிலை ஆளுநருக்கான அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இது அரசியல் சாசன திருத்த மசோதா இல்லை’ என்றாா்.
இறுதியில் மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 83 உறுப்பினா்கள் ஆதரவாக வாக்களிக்கத்தனா். 45 உறுப்பினா்களே எதிா்த்து வாக்களித்தனா். இதையடுத்து, மசோதா நிறைவேறியது. வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.
முன்னதாக, மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினா் சஞ்சய் சிங் மசோதாவை எதிா்த்துப் பேசினாா். மற்றோரு ஆம் ஆத்மி கட்சி உறுப்பினா் என்.டி. குப்தாவிற்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து, குப்தா தனது தனது சுட்டுரைப்பக்கத்தில், ‘தில்லி தேசியத் தலைநகா் பகுதி அரசு திருத்த மசோதா 2021, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இன்று இந்த மசோதா மக்களவையைப் போன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டால். இந்த மசோதாவை எதிா்த்து ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடரும்’ எனத் தெரிவித்துள்ளாா்.