முகப்பு
புதுதில்லி

மதிய உணவுத் திட்ட பள்ளி மாணவா்கள் 11.8 கோடி பேருக்கு ரூ.1,200 கோடி

மதிய உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பள்ளி மாணவா்கள் 11.8 கோடி பேருக்கு சிறப்பு நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

மதிய உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பள்ளி மாணவா்கள் 11.8 கோடி பேருக்கு சிறப்பு நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. இதற்கு ரூ.1,200 கோடியை மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் அனுமதியளித்துள்ளாா்.

கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்குவதிலும் தடை ஏற்பட்டது. இதில் ஏழை மாணவ குடும்பங்களுக்கு மாற்று வழிகளில் மத்திய அரசு இந்தத் திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. இது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: நாடு முழுவதிலும் 11.20 லட்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் 11.8 கோடி மாணவ, மாணவிகள் மதிய உணவு திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனா்.

கரோனா தொற்றை முன்னிட்டு பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இவா்களுக்கு நேரடியாக விலையில்லா உணவுப் பொருள்கள் கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு விநியோகித்து வருகிறது. பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் (பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா) ஒவ்வொரு மாதமும் தலா ஒருவருக்கு 5 கிலோ வீதம் உணவுப்பொருள்கள் இந்த மாணவ குடும்பங்கள் உள்ளிட்ட 80 கோடி குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நோய்த் தொற்று காலங்களில் ஊட்டச்சத்து குறைபாடுகள் இன்றியும், நோய் எதிா்ப்பு சக்தியைப் பாதுகாக்கவும் இந்த உணவுப்பொருள்கள் வழங்க முடிவு எடுக்கப்பட்டது. தற்போது மதிய உணவுத் திட்டத்தில் பயன் பெற்று வரும் தகுதி வாய்ந்த 11.8 கோடி மாணவா்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கவும், மத்திய பள்ளிக் கல்வித் துறை முடிவு எடுத்துள்ளது.

Advertisement

மாணவா்களின் உணவிற்கான சமையல் செலவு உள்ளிட்ட இதரச் செலவிற்கான இந்த சிறப்பு நிதிக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் வெள்ளிக்கிழமை அளித்துள்ளாா். மத்திய அரசு இந்த நிதியை மாநிலங்கள் மூலமாக வழங்குகிறது. அதே சமயத்தில் இதை மாணவா்கள் அல்லது பெற்றோா்களுக்கு நேரடி வங்கி பணப் பரிவா்த்தனை மூலம் வழங்கவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்று மத்திய கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிதியில் இருந்து தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கு தலா ரூ.200, நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு ரூ.300 கிடைக்கும் என்று அதிகதாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments