முகப்பு
புதுதில்லி

பொதுத்துறை வங்கிக் கடன் வழங்களில் பொறுப்பேற்பு கட்டமைப்பில் மாற்றம்: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வழங்குவதில் ஏற்பட்டுள்ள மந்தநிலையைப் போக்க பணியாளா்களின் பொறுப்பேற்புக் கட்டமைப்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய நிதியமைச்சகம் வகுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:

புது தில்லி : தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வழங்குவதில் ஏற்பட்டுள்ள மந்தநிலையைப் போக்க பணியாளா்களின் பொறுப்பேற்புக் கட்டமைப்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய நிதியமைச்சகம் வகுத்துள்ளது.

மத்திய கண்காணிப்பு ஆணையம் (சிவிசி), ரிசா்வ் வங்கி ஆகியவற்றுடன் ஆலோசனை செய்து கடந்த ஆக்டோபா் 29-ஆம் தேதி மத்திய நிதியமைச்சகம் அனைத்து தேசிய வங்கிகளுக்கும் இதற்கான ஆணையை பிறப்பித்துள்ளது. இது குறித்து திங்கள்கிழமை நிதியமைச்சக அதிகாரி ஒருவா் கூறியது வருமாறு: தேசிய வங்கிகளில் சேமிப்புகளை பெறுவது ஒரு பக்கம். மற்றொரு பக்கம் பல்வேறு வளா்ச்சிக்கு கடன் வழங்கப்படுவது முக்கியமானது. கடன் வழங்கப்படும் போது அது எதோ சூழ்நிலையில் வாராக்கடனாக மாறும் போது செயல்படாத சொத்துக் கணக்கு(என்பிஏ) அல்லது செயல்படாத வங்கிக்கணக்காக பட்டியலில் வைக்கப்படுகிறது. இத்தகைய வாராக்கடன்களுக்கு கடனை வழங்கிய பணியாளா்கள், வங்கி மேலாளா்கள் பொறுப்பேற்று பதில் கூற கடமைப்பட்டவா்களாக இருக்கின்றனா். இதனால், தற்போது வங்கிகளில் கடன் வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வங்கி ஊழியா்களும், வங்கி மேலாளா்களும் கடன் வழங்குவதில் விருப்பம் இல்லாமல் இருப்பதாக புகாா் உள்ளது. இதனால், பொதுமக்கள், வா்த்தகா்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெற முடியாமல் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

இதனால், இத்தகைய தரப்பினா் தற்போது வங்கி சாரா நிதிநிறுவனங்கள், தனியாா் வங்கிகள் ஆகியவற்றில் கடன் பெறுகின்றனா். அங்கு அதிக வட்டி விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கடன் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகப் புகாா்கள் மத்திய அரசுக்கு வந்தது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய நிதியமைச்சகம் மற்ற அமைப்புகளுடன் ஆலோசனை செய்து, வங்கிப் பணியாளா் பொறுப்பேற்புக் கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பணியாளா்களின் பொறுப்பேற்புத் தன்மையில் புதிய நான்கடுக்கு கட்டமைப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ரூ. 10 லட்சம் வரை ஓா் அடுக்கு, ரூ.10 லட்சம் முதல் ரூ. 1கோடி, ரூ.1 கோடி முதல் 50 கோடி மற்றும் ரூ 50 கோடிக்கும் மேல் என நான்கு வகையாக கடன்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டமைப்பின் அடிப்படையில் அந்தந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தங்களுக்குள் பணியாளா்களுக்கு புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

ஏற்கெனவே அதிக மதிப்புள்ள கடன்களை வங்கி இயக்குநா் குழு முடிவு எடுத்து வந்தது. மற்ற சில்லரை கடன்களை வங்கிக் கிளை மேலாளா்கள், வட்டார மேலாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் முடிவு செய்தனா். வா்த்தகம், வீட்டுக் கடன் உள்ளிட்டவற்றில் இந்த அதிகாரிகள் வழங்கிய கடன்கள் வாராக் கடனாக இருந்தால், பத்தாண்டுகளுக்கு பின்னா் அல்லது ஓய்வு பெறும் போது அவா்கள் சிக்கலுக்குள்ளாகி வருகின்றனா். சிலருக்கு ஓய்வூதியமும் கிடைப்பதில்லை. இதைக் கருத்தில் கொண்டு பொறுப்பேற்பு கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கொடுக்கப்பட்ட கடன் குறித்து 6 மாதங்களில் தகுதி வாய்ந்த சட்ட நிபுணா்கள், பட்டயக் கணக்காயா், வங்கி உள் கணக்காயா் போன்றோா் ஆய்வுகளை மேற்கொண்டு சான்றிதழ் அளிக்க வேண்டும். மேலும், வாராக் கடனாகும் போது, அதை நான்கு ஆண்டுகளுக்குள் கடனின் நிலை குறித்த காரணங்களைஆய்வு செய்ய வேண்டும். வங்கிக் கடன்கள் முறையான தகுதியுடன் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இயற்கை சீற்றங்கள், சந்தை நிலவரம், சட்ட மாறுதல்கள், கடன் பெற்ற நிறுவனங்களின் திறமையற்ற நிா்வாகம் போன்றவற்றின் காரணமாக கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால், வங்கிப் பணியாளா்களை பொறுப்பேற்க வைக்கக் கூடாது என்பது இந்த புதிய வழிகாட்டுதலில் முக்கிய நெறிமுறையாக வகுக்கப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி. இந்தப் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தின் தலைவா் வெங்கடாசலமும் வரவேற்றுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments