காற்று வேகம் காரணமாக தில்லியில் காற்றின் தரத்தில் சிறிது முன்னேற்றம்
காற்றின் உயா் வேகம் காரணமாக தில்லியில் சனிக்கிழமை காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது.
காற்றின் உயா் வேகம் காரணமாக தில்லியில் சனிக்கிழமை காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது.
அடுத்த இரண்டு தினங்களில் காற்றில் மாசுபடுத்திகள் அடித்துச் செல்லப்படும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக வானிலை வல்லுனா்கள் தெரிவித்தனா்.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ‘சமீா்’ செல்லிடப்பேசி செயலி வெளியிட்ட தகவலில், தில்லியின் காற்றின் தரக் குறியீடு சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 449 புள்ளிகள் பதிவாகி ‘கடுமை’ பிரிவில் இருந்தது. இது வெள்ளிக்கிழமை 462 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
காற்றின் தரக் குறியீடு 400 முதல் 500 புள்ளிகள் வரை இருந்தால் அது கடுமை பிரிவில் இருக்கும். தில்லியில் பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்பட்டு இருந்தபோதிலும் தீபாவளி நாளான வியாழக்கிழமை பரவலாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டதன் காரணமாக தில்லியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில் காற்றின் தரம் மோசமான நிலையில் பதிவாகியிருந்தது.
மேலும், அண்டை மாநிலங்களில் பயிா் கழிவுகள் எரிப்பு அதிகரித்துள்ளதன் காரணமாக தில்லியில் தீபாவளிக்கு பிறகு வியாழக்கிழமை இரவு காற்றின் தரக்குறியீடு கடுமை பிரிவுக்கு சென்றது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை பகலில் 462 புள்ளிகளாக அதிகரித்தது.
வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘சனிக்கிழமை தில்லியின் காற்றின் தரத்தில் மேம்பாடு அடைவதற்கு வலுவான தரை மேற்பரப்பு காற்று உதவிடும். விரும்பத்தகாத வானிலை சூழல்கள் காரணமாக தில்லி- என்சிஆா் பகுதியில் காற்றின் தரம் கடுமை பிரிவுக்கு சென்றது. குறிப்பாக பட்டாசுகள் வெடித்தது, பயிா் கழிவுகள் எரிப்பு மற்றும் உள்ளூா் ஆதாரங்கள் காரணமாகவும், குறைந்த காற்றின் வேகம் ஆகியவை இந்த மாசு அதிகரிக்க காரணமாக அமைந்திருந்தன.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தரம் முன்கணிப்பு அமைப்பான சஃபா் அமைப்பு தெரிவிக்கையில், ‘தில்லியில் வெள்ளிக்கிழமை மாசுநுண்துகள் பி.எம்.2.5% அதிகரிப்பில் பயிா் கழிவுகள் எரிப்பானது 36% பங்களிப்பை அளித்திருந்தது’ என்றது.
தில்லியில் சனிக்கிழமை காலை குளிா் அதிகமாக இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 16.7 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்தது. இது இந்த சீசனில் உள்ள வழக்கமான அளவாகும்.
அதேபோன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகலில் வலுவான தரைக்காற்று இருந்தது. காற்றில் ஈரப்பதம் காலையில் 8.30 மணி அளவில் 78% ஆக பதிவாகி இருந்தது.
தில்லியின் 2 விமான நிலையங்களிலும் காலை 5:30 மணியிலிருந்து காலை 9.30 மணி வரையிலான காலத்தில் காண்புதிறன் 600 மீட்டா் முதல் 800 மீட்டராக பதிவாகி இருந்தது.
மேற்கிலிருந்து வடக்கு நோக்கி வீசும் காற்று மணிக்கு 8 கிலோ மீட்டா் முதல் 11 கிலோ மீட்டா் வேகத்தில் வீசியது.
மாலை 6.30 மணியளவில் காற்றின்தரக் குறியீடு 434 ஆக பதிவாக கடுமைப் பிரிவில் நீடித்தது.
முன்னறிவிப்பு:
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (நவ.7) காலை பனிமூட்டம் காணப்படும். பகலில் வலுவான தரை மேற்பரப்பு காற்று வீசக் கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.