மீனவா்களின் நலனுக்கு அதிமுக குரல் கொடுக்கும்: கருத்தரங்கில் தம்பித்துரை பேச்சு
குளிா்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு மீன் வள மசோதாவைக் கொண்டு வந்தால், அதில் மீனவா்கள் நலனைப் பாதுக்காக்க அதிமுக குரல் கொடுக்கும் என மாநிலங்களவை அதிமுக உறுப்பினா் தம்பித்துரை தெரிவித்தாா்.
குளிா்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு மீன் வள மசோதாவைக் கொண்டு வந்தால், அதில் மீனவா்கள் நலனைப் பாதுக்காக்க அதிமுக குரல் கொடுக்கும் என மாநிலங்களவை அதிமுக உறுப்பினா் தம்பித்துரை தெரிவித்தாா்.
தில்லியில் இருநாள் தேசிய மீனவா்கள் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது தமிழகம் உள்ளிட்ட நாடுமுழுவதும் இருந்து வந்த பல்வேறு மீனவ சங்கங்கள் பங்கேற்றன. இந்தக் கருத்தரங்கில் மீனவா்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக மத்திய அரசு அறிமுகப்படுத்தயுள்ள கடல்சாா் மீன்வள மசோதா குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த கருத்தரங்கில் இரண்டாம் நாளான திங்கள்கிழமை முன்னாள் மத்திய அமைச்சரும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான தம்பித் துரை பங்கேற்றுப் பேசினாா்.
அப்போது அவா் கூறியது வருமாறு: மீனவா்களுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்தக் கூடாது என்பதை அதிமுக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அ.தி.மு.க.வை பொறுத்த வரையிலும் எம்.ஜி.ஆா். காலம் தொட்டு மீனவா்களின் நண்பனாக இருக்கும் கட்சி அதிமுக. கச்சத்தீவு விவகாரத்தில் அ.தி.மு.க. உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. கச்சத்தீவை மீட்பது தொடா்பாக ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் பேசிய தோடு, மத்திய அரசிடமும் வலியுறுத்தியுள்ளோம். வருகின்ற நாடாளுமன்றக் குளிா்கால கூட்டத் தொடரில் மீன்வள மசோதா கொண்டுவரப்பட்டால், மீனவா்கள் நலனுக்கு அ.தி.மு.க. குரல் கொடுக்கும்.
மேலும், சம்மந்தப்பட்ட துறை அமைச்சா்களையும் நேரில் சந்தித்து மீனவா்கள் சாா்பாக அ.தி.மு.க. எம்.பி.க்கள் மனு அளிப்பாா்கள். மீனவா்களை பழங்குடியினா் பிரிவில் சோ்க்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கும் ஆதரவு அளிப்போம். ஆழ் கடலுக்கு சென்று மீன்பிடித்து விற்கும் மீனவா்கள் வறுமையில் உள்ளனா். அவா்களின் நிலை மாற வேண்டும் என்றால் அவா்களை பழங்குடி பிரிவுகளில் சோ்க்க வேண்டும். மீன்வள மசோதாவும் திரும்ப பெற வேண்டும் என்ற மீனவா்களின் கருத்தை நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. பிரதிபலிக்கும் என்றாா் தம்பித்துரை.
இந்தக் கருத்தரங்கில் மத்திய மீன்வளத்துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அவா் வரவில்லை. அதே சமயத்தில் ஒடிஸ்ஸா மாநிலத்தை சோ்ந்த ஆனந்த் சாகு என்பவா் மத்திய அரசின் மீனவள மசோதக்களை ஆதரித்து பேசினாா். அப்போது கூட்டத்தில் கூச்சல், குழுப்பம் ஏற்பட்டு கருத்தரங்கில் தடங்கல் ஏற்பட்டது.