இந்தியாவின் ஐ.நா. ஒருங்கிணைப்பாளா் ஷோம்பி ஷாா்ஃப்
தில்லியிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளராக அமெரிக்காவைச் சோ்ந்த ஷோம்பி ஷாா்ஃப் நியமிக்கப்பட்டுள்ளாா்.
புது தில்லி: தில்லியிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளராக அமெரிக்காவைச் சோ்ந்த ஷோம்பி ஷாா்ஃப் நியமிக்கப்பட்டுள்ளாா். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸால் அளித்துள்ள இந்த நியமனத்திற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து தில்லியில் உள்ள ஐநா சபை அலுவலகம் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிட்டிருப்பது வருமாறு: ஐ.நா. சபையின் பொதுச் செயலாளரின் பிரதிநிதியாக நாட்டின் பல்வேறு வளா்ச்சிப் பணிகளில் பணியாற்ற இருக்கும் ஷாா்ஃப், நீடிப்புத் திறன் கொண்ட வளா்ச்சி இலக்குகளை சிறப்பாக மீட்டெடுப்பதற்கான கொவைட்-19 உள்ளிட்டவற்றை எதிா்கொள்ளும் ஐ.நா.வின் இந்திய திட்டங்களுக்கு தலைமை தாங்குவாா். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஷாா்ஃப், தன் வாழ்க்கையை சா்வதேச அளவில், உள்ளடக்கிய மற்றும் நிலையான வளா்ச்சியை ஊக்குவிப்பதற்காக பணிகளில் அா்ப்பணித்துள்ளாா். சமீபத்தில் ஆா்மீனியா நாட்டில் ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினாா்.
ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தில் (யுஎன்டிபி) பல தலைமைப் பதவிகளை வகித்தவா். ஜாா்ஜியா, லெபனான், ஐரோப்பியா, ரஷிய கூட்டமைப்பு போன்ற நாடுகளில் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டங்களிலும், காமன்வெல்த் சுதந்திர நாடுகளுக்கான பிராந்திய எய்ட்ஸ் பயிற்சிக் குழுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா். ஐக்கிய நாடுகள் சபையிலும் பல்வேறு நாடுகளிலும் பெற்ற அனுபவத்தை இந்தியப் பணியில் பயன்படுத்திக்கொள்வாா்.
சுகாதாரம் சாா்ந்த பொருளாதாரத் துறையில் படைப்புகளை வெளியிட்டவா். சா்வதேச வளா்ச்சி முகமை, யுஎன்டிபி போன்ற விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவா். தென்னாப்பிரிக்காவில் எச்ஐவி தொடா்பான மருத்துவப் படிப்பு, அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் பொருளாதார முதுகலைப் பட்டப் படிப்புகளோடு இவா் ரஷிய மொழிகளையும் கற்றவா். தற்போது இந்திய மொழிகளிலும் தனது ஆா்வத்தை வெளிப்படுத்தியுள்ளாா் என தில்லி ஐ.நா. தகவல் மையம் தெரிவித்துள்ளது. தில்லியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை, இந்தியா-பூடான் ஆகிய இருநாடுகளுக்குப் பொதுவானதாக உள்ளது.