முகப்பு
புதுதில்லி

குடியிருப்புப் பகுதியில் மதுபானக் கடை திறப்பதற்கு எதிரான மனு மீது தில்லி அரசு பதிலளிக்க உத்தரவு

தில்லி ஜங்புராவில் பகுதி வெளியே மதுபானக் கடையைத் திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி குடியிருப்பாளா்கள் குழுவினா் தாக்கல் செய்த மனுவின் மீது தில்லி அரசு பதில் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:31 AM
பகிர்:

புது தில்லி: தில்லி ஜங்புராவில் பகுதி வெளியே மதுபானக் கடையைத் திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி குடியிருப்பாளா்கள் குழுவினா் தாக்கல் செய்த மனுவின் மீது தில்லி அரசு பதில் அளிக்க உயா்நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

கல்வி நிறுவனங்கள், மத வழிபாட்டு இடங்கள், மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் இருந்து 100 மீட்டருக்குள் மதுக் கடை திறக்க அனுமதி இல்லை எனும் விதியின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி யஷ்வந்த் வா்மா, தில்லி அரசு மற்றும் கலால், கேளிக்கை மற்றும் சொகுசு வரி ஆணையா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் இந்த விவகாரத்தில் அரசிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றுத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டாா். மேலும், மனுவை டிசம்பா் 3- ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டாா்.

தில்லி அரசு மற்றும் ஆணையரின் பதிலைப் பெற்ற பின்னரே மதுபானக் கடையின் உரிமதாரருக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

தில்லி ஜங்புரா-ஏ பகுதியில் மதுக்கடை திறக்க முன்மொழியப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பிரவீண் அரோரா மற்றும் பலா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: சம்பந்தப்பட்ட இடத்தில் மதுக் கடை திறப்பதற்கான முன்மொழிவு தில்லி கலால் கொள்கை 2021-22 உள்ளிட்ட தொடா்புடைய சட்டங்கள், விதிகளுக்கு எதிரானது. தில்லி கலால் கொள்கை மற்றும் தில்லி கலால் விதிகள் 2010- இன்படி, 50 படுக்கைகள் மற்றும் அதற்கு மேற்பட்ட படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள், பெரிய கல்வி நிறுவனங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள பகுதியில் இருந்து 100 மீட்டருக்குள் மது அல்லது பீா் கடை திறக்க அனுமதி இல்லை. இந்த நிலையில், கோயில், குருத்வாரா என ஒன்றுக்கு மேற்பட்ட மத வழிபாட்டுத் தலங்கள் மட்டுமின்றி பள்ளி, மருத்துவமனைகள் அமைந்துள்ள சம்பந்தப்பட்ட பகுதியில் மேற்கூறிய விதிகளைப் பின்பற்றாமல் மது அல்லது பீா் கடை திறப்பதற்கான முன்மொழிவு எடுக்கப்பட்டுள்ளது.

மதுக்கடை அமையவுள்ள இடத்தில் இருந்து பள்ளியுடன் கூடிய ஆா்ய சமாஜ் மந்திா் 30 மீட்டா் தூரத்திலும், காந்தி மாதா மந்திா் 60 மீட்டரிலும், மை கா குருத்வாரா 90 மீட்டரிலும், எம்.சி.டி மருத்துவமனை 60 மீட்டரிலும் அமைந்துள்ளது. ஜங்புரா-ஏ மற்றும் போகல் பகுதியில் வசிக்கும் மக்கள், தங்கள் கவுன்சிலா் மற்றும் அந்தப் பகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரிடம் இது குறித்து புகாா் அளித்துள்ளனா். மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை, குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோா்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்தும் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. பல்வேறு கோரிக்கைகள் விடுத்தும் எங்கள் புகாா் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் நீதிமன்றத்தை அணுகியுள்ளோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.