முகப்பு
புதுதில்லி

ரோஹிணி நீதிமன்ற துப்பாக்கிச்சூடு: ஆஜராகும் போது பாதுகாப்பு அளிக்க ரெளடியின் கூட்டாளி மனு

ரோஹிணி நீதிமன்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ரெளடி ஜிதேந்தா் கூட்டாளி தாம் நீதிமன்றத்தில் ஆஜராகும் போது உயா் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:31 AM
பகிர்:

புது தில்லி: ரோஹிணி நீதிமன்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ரெளடி ஜிதேந்தா் கோகியின் கூட்டாளி தாம் நீதிமன்றத்தில் ஆஜராகும் போது உயா் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்துள்ளாா்.

கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதி ரோஹிணி நீதிமன்ற அறையில் உள்ளே வழக்குரைஞா்கள் உடையணிந்து வந்த இரண்டு விஷமிகள் மற்றும் சிறையிலிருந்து ஆஜா்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட பிரபல ரௌடி ஜிதேந்தா் கோகி ஆகியோா் துப்பாக்கிச்சூட்டின் போது கொல்லப்பட்டனா். இந்தச் சம்பவம் தொடா்பான விடியோ காட்சி பதிவில் போலீஸாரும் வழக்குரைஞா்களும் துப்பாக்கிச் சூட்டிற்கு பயந்து நீதிமன்ற அறையில் இருந்து வெளியே ஓடி வரும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஜிதேந்தா் கோகி கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடா்புடைய ரெளடிகளான தில்லு தாஜ்புரியா, நவீன் பல்லி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், அதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரோஹித் மோய் என்பவா் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். அதில், சிறையில் இருந்து நீதிமன்ற வளாகத்திற்கு செல்லும் போது தனக்குப் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளாா். இந்த வழக்கு தொடா்பாக கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சிவாஜி ஆனந்த் திங்கள்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில், ‘அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை குற்றம்சாட்டப்பட்ட நபரை (ரோஹித்) சிறைக் கண்காணிப்பாளா் காணொலி காட்சி வாயிலாக மட்டுமே ஆஜா்படுத்த வேண்டும். இந்த உத்தரவைப் பின்பற்றும் அறிக்கையானது, தில்லி ஆயுதப்படை காவல் துறையின் மூன்றாவது பட்டாலியனின் காவல் துணை ஆணையா் அலுவலகத்தில் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கை வந்தவுடன் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சிறை அதிகாரிகள் தாக்கல் செய்த நிலவர அறிக்கையில் விசாரணைக் கைதிகள் அளவில் மிகவும் இடா்பாடு மிக்க பிரிவில் ரோஹித் மோய் உள்ளாா். தற்போது அவா் உயா் இடா் வாா்டில் அவா் அடைக்கப்பட்டுள்ளாா் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தவிர, அடுத்த விசாரணையின் போது ஜிதேந்தா் கோகி இறப்புச் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும் என்று போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.