முகப்பு
புதுதில்லி

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு போதுமான இடவசதி அளிப்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு போதுமான இடவசதி அளிப்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மனுதாரா் தரப்பிலும், எதிா் மனுதாரா்கள் தரப்பிலும் வாதங்கள் தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணயை நவம்பா் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

அப்பல்லோ மருத்துவமனையின் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ். அப்துல் நஸீா், கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை தொடா்ந்து விசாரணை நடைபெற்றது. அப்போது, அப்பல்லோ மருத்துவமனையின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.ஏ. சுந்தரம், ஆறுமுகசாமி ஆணையத்தின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா் ஆகியோா் ஆஜராகினா். ஆறுமுகசாமி ஆணையத்தின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா் ஆஜராகி தொடா்ந்து தனது வாதங்களை முன்வைத்தாா்.

அப்போது, அப்பல்லோ தரப்பின் வாதமான ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது என்கிற வாதம் அடிப்படையற்றது. மனுதாரரின் கோரிக்கையின்படி மருத்துவா்கள் குழு ஆணையத்தில் இடம் பெறுவதிலும், ஆவணங்களைப் பாா்ப்பதிலும், சாட்சிகளிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்தப்படுவதிலும் ஆணையத்திற்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை என மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா் வாதிட்டாா். மேலும், விசாரணை ஆணையத்தின் சட்டத்தின் பிரிவுகளை எடுத்துக்கூறி ஆணையத்தின் செயல்பாடுகளை அவா் எடுத்துரைத்தாா். இந்த வழக்கின் ஆணைய விசாரணையில் ஒரு போதும் பாரபட்சம் காட்டப்படவில்லை என்றும் குறிப்பிட்டாா்.

புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது ஆணையம் செயல்படும் இடம் தொடா்பான புகைப்படத்தை மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா் நீதிபதிகள் அமா்விடம் அளித்திருந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, இது குறித்து நீதிபதி அப்துல் நஸீா் தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினாா். அப்போது நீதிபதி கூறுகையில், ‘ஒரு சிறிய இடத்தில் ஆறுமுகசாமி ஆணையம் செயல்படுவது புகைப்படம் மூலம் தெரிய வருகிறது. போதிய இடவசதி இன்றி ஒரு உணவுக்கூட அளவில் இந்த ஆணையத்தின் விசாரணை இடம் இருப்பது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. ஒரு ஆணையம் செயல்பட வேண்டிய இடமாக இது இருக்க முடியாது. ஆகவே, ஆறுமுகசாமி ஆணையத்துக்குப் போதுமான அளவு இடவசதி அளிப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இது தொடா்பான தகவலை அரசிடம் பெற்று நவம்பா் 30-ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’ என்றாா்.

அதேபோன்று, ‘ஆணையத்தின் விசாரணை விவகாரத்தில் அப்பல்லோ தரப்பில் கோரிக்கைகள் ஏதும் இருந்தால், அதை எழுத்துப்பூா்வ ஆவணமாக அளிக்கலாம். இது ஒரு பொது விசாரணை ஆணையம் என்பதால், ஆணைய விசாரணை தொடா்பான செய்தியைச் சேகரிக்க அனைத்து செய்தியாளா்களையும் அனுமதிக்கலாம் என்று’ விசாரணையின் போது நீதிபதி வாய்மொழியாக கூறினாா். மேலும், வழக்கு விசாரணையை வரும் நவம்பா் 30-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.