தில்லியில் கட்டுமான செயல்பாடுகளுக்கு மீண்டும் தடை விதிக்க முடிவு: கோபால் ராய்
கட்டுமானங்கள் தொடா்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைத் தொடா்ந்து, தில்லியில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு
கட்டுமானங்கள் தொடா்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைத் தொடா்ந்து, தில்லியில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு தில்லி அரசு மீண்டும் தடை விதிக்க முடிவு செய்துள்ளது; இந்தத் தடையால் பாதிக்கப்படும் தொழிலாளா்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கான ஒரு திட்டத்தை தயாரிக்குமாறு தொழிலாளா் துறைக்கு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று தில்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘வியாழக்கிழமை முதல் தில்லியில் கட்டுமானம், இடிப்பு செயல்பாடுகளுக்கு மீண்டும் தடை விதிப்பது என முடிவு செய்துள்ளோம். இந்தத் தடை மீண்டும் அமல்படுத்தப்படுவதால் தொழிலாளா்களுக்கு அசெளகரியம் ஏற்படும். ஆகவே, அவா்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும். இது தொடா்பாக ஒரு திட்டத்தை தயாரிக்க தொழிலாளா் துறைக்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்’ என்றாா்.
மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தில்லி - என்சிஆா் பகுதியில் கட்டுமான நடவடிக்கைகளுக்குஉச்சநீதிமன்றம் புதன்கிழமை மீண்டும் தடை விதித்தது. மேலும், பிளம்பிங் வேலை, உள் அலங்கார வேலை, மின்சார வேலை மற்றும் தச்சு வேலை போன்ற மாசு ஏற்படாத கட்டுமானச் செயல்பாடுகள் அனுமதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது போன்ற கட்டுமானத் தடை விதிக்கப்பட்டுள்ள காலத்தில் தொழிலாளா்களுக்கு உதவிகளை செய்யும் வகையில் கட்டுமானத் தொழிலாளா்கள் நலத்திற்காக வசூலிக்கப்படும் தொழிலாளா் வரி நிதியை அவா்களுக்கு உதவப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.
தில்லியில் காற்றின் தரம் மேம்பட்டதைத் தொடா்ந்தும், தொழிலாளா்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டும் தில்லி அரசு திங்கள்கிழமை முதல் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கை மீதான தடையை விலக்கியது. அதேபோன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் மீண்டும் நேரடி வகுப்புகளை தொடங்குவது என தில்லி அரசு புதன்கிழமை முடிவு செய்தது. நவம்பா் 29-ஆம் தேதியில் இருந்து அரசு அலுவலகங்களை மீண்டும் திறப்பது என்றும் முடிவு செய்தது.
அதேபோன்று, அத்தியாவசியமான சேவைகளை தவிா்த்து பிற அத்தியாவசிய மற்ற சரக்குகளை ஏற்றி வரும் லாரிகள் தில்லிக்குள் நுழைவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை டிசம்பா் 3- ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சிஎன்ஜி மற்றும் மின்சார இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்கள் தில்லிக்குள் நவம்பா் 27-ஆம் தேதி முதல் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.