கரோனா கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தொடர உத்தரவிடக் கோரிய மனு முடித்துவைப்பு
மத்திய அரசு மற்றும் மாநில அரசு மூலமாக ஏற்கெனவே அதீத கவனிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் கரோனா நோய்த் தொற்று பரவலை
மத்திய அரசு மற்றும் மாநில அரசு மூலமாக ஏற்கெனவே அதீத கவனிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் கரோனா நோய்த் தொற்று பரவலை எதிா்கொள்வதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரியுள்ல இந்த மனுவை தொடா்ந்து விசாரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று தில்லி உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
இது தொடா்பாக வழக்குரைஞா் திரிவேணி பொதேகா் என்பவா் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ‘கரோனா நோய்த் தொற்றை கருத்தில் கொண்டு அரசு போதிய சுகாதார கவனிப்பு வசதிகளை அளித்து இருக்கிறது. தற்போது பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளையும் வழங்கி வருகிறது. இதனால், இந்த மனுவை தொடா்ந்து விசாரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அனில் சோனி கூறுகையில், ‘இந்த மனு கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்றுக்கு எதிராக அரசுத் துறைகள் மூலம் ஏற்கெனவே போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. இதனால், இந்த மனு பயனற்றதாகிவிட்டது’ என்று தெரிவித்தாா். இதையடுத்து, மனு மீதான விசாரணை நடவடிக்கைகளை நீதிபதிகள் அமா்வு முடித்து வைத்தது. மேலும், ஏதேனும் சிரமங்கள் இருக்கும்பட்சத்தில் மீண்டும் உரிய அமைப்பிடம் அணுக மனுதாரருக்கு அனுமதியையும் நீதிமன்றம் வழங்கியது.
Advertisement
கரோனா நோய்த் தொற்று சூழலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனு மீது கடந்த ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதி நீதிமன்றம் மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. கரோனா நோய்களுக்கான சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்காக உரிய மருத்துவ வசதிகளை அளிக்கவும், உரிய தகவல் மற்றும் முக்கியமான தகவல்களை பெறவும் மத்திய அரசுக்கும் தில்லி அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மனுவில் கோரப்பட்டிருந்தது.