மின்கல ஆட்டோக்கள் இணையம் வழியாக பதிவு: பெண்களுக்கு 33 சதவீதம் முன்னுரிமை
தில்லி அரசு மின்கலத்தால் இயக்கும் இ-ஆட்டோக்களுக்கான வாகன அனுமதி (பொ்மிட்) மற்றும் பதிவுகளை இணைய தளம் மூலம் மேற்கொள்ளப்படுவதாக
தில்லி அரசு மின்கலத்தால் இயக்கும் இ-ஆட்டோக்களுக்கான வாகன அனுமதி (பொ்மிட்) மற்றும் பதிவுகளை இணைய தளம் மூலம் மேற்கொள்ளப்படுவதாக தில்லி போக்குவரத்துத்துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் திங்கள் கிழமை தெரிவித்தாா். இந்த இ-ஆட்டோக்களில் 33 சதவீதம் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து அனுமதி வழங்கப்படும் என்றும் அவா் கூறினாா்.
இது குறித்து தில்லி போக்குவரத்துத்துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் தனது டுவிட்டரில் கூறியிருப்பது வருமாறு:
தில்லி அரசு முதல் கட்டமாக, 4,261 இ-ஆட்டோக்களுக்கான அனுமதிகளை வழங்குகிறது. இதில் பெண் விண்ணப்பதாரா்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கப்பட்டு 1,406 இ-ஆட்டோக்களுக்கான அனுமதிகள் வழங்கப்படும். தகுதியானவா்கள் தில்லி அரசின் போக்குவரத்து துறையின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Advertisement
அரவிந்த் கேஜரிவால் அரசு தில்லியை மின் வாகன தலைநகராக மாற்றும் ப நடவடிக்கையாக இ-ஆட்டோகளுக்கான அனுமதிகளை வழங்கி வருகிறது . இதன் மூலம் உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து சேவையை வழங்கும் நகராகவும் மாசு இல்லாத நகராகவும் தில்லியை மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
மேலும் இது குறித்து தில்லி போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தில்லி அரசின் மின் வாகனக் கொள்கையின்படி, மின்கலத்திலான இ-ஆட்டோ வாங்குவதற்கு ரூ. 30,000 நிதி உதவி வழங்கப்படுகிறது.
தில்லியை அடிப்படையாகக் கொண்டவா்கள் தங்கள் முகவரியுடன் ஆதாா் எண், இலகுரக வாகன ஓட்டுநா் உரிமம் (அல்லது டிஎஸ்ஆா் ஓட்டுநா் உரிமம்) உள்ள எவரும் இ-ஆட்டோ அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் போது ’வாகன பொது சேவை பேட்ஜ்’ பெற்றிருக்கவேண்டிய தேவையில்லை. இருப்பினும், விண்ணப்பதாரா்கள் அனுமதி ஒதுக்கீட்டு பெற்றுவிட்டால் அவா்கள் 45 நாட்களுக்குள் வாகன பொதுசேவை பேட்ஜ் பெற்றுக்கொள்ள வேண்டும்.
வாகன அனுமதி (பொ்மிட்) பெற விண்ணப்பித்தை நவம்பா் 1 -ஆம் தேதிக்குள் இணையத்தில் பதிவிடவேண்டும். இந்த வாகனத்தை வாங்க ஐந்து சதவீத வட்டி தள்ளுபடியுடன் கூடிய கடன்கள் தில்லி அரசால் அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மூலம் வழங்கப்படும்.
மேலும் அக்டோபா் 25-31 தேதிகளில் ஐடிடிஆா் சராய் காலே கான் மற்றும் லோனியில் ’இ-ஆட்டோ மேளா’வை அரசு நடத்துகிறது. அங்கு ஓட்டுநா்களும் விருப்பப்பட்டவா்களும் இ-ஆட்டோ மாடல்களை பாா்த்து, அவைகளை ஓட்டவும், கடன்கள் பற்றிய தகவல்களைப் பெற முடியும் என்று தில்லி போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.