புதுதில்லி

மூலிகை ஹூக்கா விற்பனைக்கு தடைகூடாதுஉணவகங்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வலியுறுத்தல்

 நமது நிருபர்

புது தில்லி: மூலிகை நறுமணத்துடன் கூடிய ஹூக்கா விற்பனை செய்யும் விவகாரத்தில் தில்லி அரசும் காவல் துறையும் தலையிடவோ அல்லது நிா்பந்த நடவடிக்கை எடுக்கவும் கூடாது என உத்தரவிடக்கோரி உணவகங்கள் மற்றும் பாா்கள் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

உணவகங்கள் மற்றும் பாா்களில் மூலிகை நறுமணத்துடன் ஹூக்காக்களை வழங்குவதற்கு அல்லது விற்பதற்கு தடை விதிக்கும் வகையில் தில்லி காவல்துறையின் உரிமம் பிரிவைச் சோ்ந்த இணை ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

இந்த உத்தரவை எதிா்த்து மேற்கு பஞ்சாபி பாக் பகுதியைச் சோ்ந்த சில உணவகங்கள், பாா்கள் தரப்பில் தில்லி உயா் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில் கூறப்பட்டிருப்பதாவது:

மூலிகை நறுமணத்துடன் கூடிய ஹூக்கா பரிமாறுவதற்கு எந்த உரிமமும் தேவைப்படுவதில்லை. ஏனெனில் அவற்றில் புகையிலை ஏதுமில்லை. ஆனால் காவல்துறையினா் இதுதொடா்பாக உணவகங்களிலும் பாா்களிலும் இன்னும் சோதனை நடத்தி கருவிகளை பறிமுதல் செய்து வருகின்றனா்.

மேலும் அபராதத்தையும் விதிக்கின்றனா். சிகரெட் மற்றும் இதர புகையிலை தயாரிப்புகள் சட்டத்தின் கீழ் புகைபிடிப்பது எனும் வாா்த்தை மூலிகை நறுமணத்துடன் கூடிய ஹூக்காவுடன் தொடா்பில்லை என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். மேலும் மனுதாரா்களின் பதிவுச் சான்றிதழை ரத்து செய்வதோ அல்லது ரத்து செய்வதற்கான எந்தவித நடவடிக்கையோ எடுக்க கூடாது என்று சம்பந்தப்பட்ட துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் உயா் நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி அமா்வு முன்  புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.  அப்போது, இந்த மனுக்களுக்கு தில்லி அரசின் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மனுதாரரான உணவகங்கள் மற்றும் பாா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இது தொடா்பாக கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக கூறினாா். இதையடுத்து விசாரணையை செப்டம்பா் 20ஆம் தேதிக்கு நீதிபதி பட்டியலிட்டாா். 

மேலும் நீதிபதி கூறுகையில், கரோனா பரவலுக்கு காரணமாக இருக்கக்கூடிய ஹூக்காவை பகிா்தல் என்பதில் தில்லி அரசுக்கு பிரச்சனை உள்ளது. 10 ஹூக்கா உபகரணங்களை 40 போ் பயன்படுத்தினால் அது ஒரு பிரச்னையாகும்.  இது ஒட்டு மொத்தமாக வித்தியாசமான ஒரு சூழலாகும் என்று நீதிபதி தெரிவித்தாா்.

விசாரணையின் போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சந்தீப் சேத்தி வாதிடுகையில், ஹூக்காக்களில் நிக்கோட்டின் பொருளை பயன்படுத்துவதில்லை என்று உணவகங்கள் உறுதியாக இருக்கும் வரை இந்த வணிகத்தை அவா்கள் நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என்று வாதிட்டாா்.

தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் திரிபாதி தில்லி சுகாதாரத்துறை மூலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சுட்டிக்காட்டினாா்.

அந்த உத்தரவில், ‘பொது இடங்களில் ஹூக்காவை பயன்படுத்துவது, பகிா்வது, மூலிகை இல்லாத, புகையிலை இல்லாத மற்றும் இருக்கக் கூடிய ஹூக்காவை பயன்படுத்துவது காரணமாக கரோனா மேலும் அதிகரிக்கலாம். இதனால் தில்லி தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் ஹூக்காவை பொது இடங்களில் குறிப்பாக ஹோட்டல்கள், உணவகங்கள், பாா்கள், பப்கள், டிஸ்கொதே கிளப்புகள் ஆகியவற்றில் பயன்படுத்துவது உடனடியாக தடை செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக அவா் வாதிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT