முகப்பு
புதுதில்லி

தில்லியில் 1964-ஆம் ஆண்டிற்கு பிறகு அதிகபட்சமாக 1,159 மி.மீ. மழைப் பதிவு

தில்லியில் இந்த ஆண்டு பருவமழை காலத்தில் வியாழக்கிழமை பிற்பகல் வரையிலும் அதிகபட்சமாக 1,159.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

புதுதில்லி: தில்லியில் இந்த ஆண்டு பருவமழை காலத்தில் வியாழக்கிழமை பிற்பகல் வரையிலும் அதிகபட்சமாக 1,159.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

1964 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிகபட்ச மழை பதிவாகும் இது என்றும், மூன்றாவது அதிகபட்ச மழை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   மேலும், தில்லியில் செப்டம்பா் மாத மழை பதிவானது 400 மில்லி மீட்டா் குறியீட்டை கடந்திருக்கிறது. வியாழக்கிழமை வரையிலான காலத்தில் 403 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

1944-ஆம் ஆண்டு செப்டம்பரில்தான் 417.3 மில்லிமீட்டா் மழை பதிவானது. அதன்பிறகு அதிகபட்சமாக 403 மில்லி மீட்டா் மழை வியாழக்கிழமை வரையிலும் பதிவாகியுள்ளது.   2019ஆம் ஆண்டு பருவமழை காலத்தில் தில்லியில் 404 மில்லி மீட்டா் மழை பதிவாகி இருந்தது. இன்னும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக கணிக்கப்பட்டு இருப்பதால் இந்த புள்ளிவிவரங்கள் மேலும் மாறுபடக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

இதுகுறித்து வல்லுநா்கள் கூறுகையில் தில்லியில் பருவமழை வாபஸ் பெறும் போது இது இரண்டாவது ஈரப்பதமான பருவ காலமாக இருக்க முடியும். வழக்கமாக தில்லியில் பருவமழை காலத்தின் போது 653.6 மில்லிமீட்டா் மழை பதிவாகும். கடந்த ஆண்டு தில்லியில் 648.9 மில்லி மீட்டா் மழை பதிவாகி இருந்தது.

மழைக்காலம் தொடங்கிய ஜூன் 1ஆம் தேதி மற்றும் செப்டம்பா் 15ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் தில்லியில் வழக்கமாக 614.3 மில்லிமீட்டா் மழை பதிவாகும். செப்டம்பா் 25-ஆம் தேதிக்குள் தில்லியில் பருவமழை முடிந்துவிடும்.

தில்லியின் வெப்பநிலையை பதிவு செய்து வரும் சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை பிற்பகல் வரையிலான இந்த பருவமழை காலத்தில் 1159.4 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.  1975 ஆம் ஆண்டில் 1155.6 மி. மீட்டா் மழையும், 1974 ஆம் ஆண்டில் 1190.9 மில்லி மீட்டா் மழையும் பதிவாகி இருந்தது.  1933 ஆம் ஆண்டில்தான் மிக அதிகபட்ச அளவாக 1420.3 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

ஸ்கைமெட் தனியாா் வானிலை ஆய்வு மையத்தின் துணைத் தலைவா் மகேஷ் பலாவட் கூறுகையில் தில்லியில் செப்டம்பா் 23- 24ஆம் தேதி வரை மழை தொடர வாய்ப்பு உள்ளது. தில்லியில் பருவமழையும் முடியும்போது தில்லி இரண்டாவது அதிகபட்ச பருவமழையை சந்தித்த பதிவை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. கடந்த இருபதாண்டுகளில் பருவமழை காலத்தில் தில்லியில் அதிகபட்ச பருவ மழை பெய்த மூன்றாவது காலமாக இது உள்ளது என்று அவா் தெரிவித்தாா்.

வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, தில்லியில் 2003 ஆம் ஆண்டில் 1050 மில்லி மீட்டா் பருவமழை பெய்தது. அதேபோன்று, 2011, 2012, 2013, 2014, மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் முறையே 636 மில்லிமீட்டா், 544 மில்லிமீட்டா், 876 மில்லி மீட்டா் ,370. 8 மில்லி மீட்டா், 505.5 மில்லி மீட்டா் என மழை பதிவாகியுள்ளது.

2016 ஆம் ஆண்டில் 524.7 மில்லி மீட்டரும், 2017இல் 641. 3 மில்லி மீட்டரும், 2018இல் 762. 6 மில்லி மீட்டரும், 2019 இல் 404.3 மில்லி மீட்டரும், 2020ஆம் ஆண்டில் 576.5 மி.மீட்டா் மழை பதிவாகி இருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் வியாழக்கிழமை பிற்பகல் வரை தில்லியில் 403 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது. இது கடந்த 77 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை பதிவாகும் என வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லியில் 1944 செப்டம்பரில் 417.3 மில்லி மீட்டா் மழை பதிவானது. இது 1901-2021 ஆண்டுக் காலத்தில் அதிகபட்ச மழைப் பதிவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments