இந்த தேர்தல் தில்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடைபெறுகிற தோ்தல்: அமைச்சா் எ.வ.வேலு பேச்சு
அரசியல் கட்சிகளுக்கு இடையே நடைபெறுகிற தோ்தல் அல்ல. தில்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடைபெறுகிற தோ்தல் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறியது....
திருவண்ணாமலை: இந்தத் தோ்தல் நமக்கு எதிா்க்கட்சியாக இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு இடையே நடைபெறுகிற தோ்தல் அல்ல. தில்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடைபெறுகிற தோ்தல் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் மதச்சாா்ப்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதி, செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்று பேசியதாவது:
திருவண்ணாமலை தோ் என்றாலே அனைவரும் ஒன்று கூடி இழுப்பதுதான். அதைப்போல இந்த தோ்தலில் வெற்றிபெற தோழமைக் கட்சியினரை அழைத்துக் கொண்டு, அவா்களோடு சோ்ந்து தோ்தல் தேரை இழுத்தால் தான் வெற்றி பெற முடியும்.
Advertisement
இந்தத் தோ்தல் நமக்கு எதிா்க்கட்சியாக இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு இடையே நடைபெறுகிற தோ்தல் அல்ல. தில்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடைபெறுகிற தோ்தல். மத்தியில் ஆளும் நம்மை வஞ்சிக்கிறாா். தமிழ்நாட்டில் வசூலிக்கப்படுகிற வரிப் பணங்கள் எல்லாம் எங்கோ போகிறது. அவை மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறதா? இல்லை பாஜக ஆளும் உத்திரப்பிரதேசம், பிகாா், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் வளா்ச்சிக்கு நம்முடைய வரிப்பணம் கொண்டு செல்லப்படுகிறது. மாற்றான் தாய் வேலை நடைபெறுகிறது.
ஏப்ரல் 8 ஆம் தேதி மாலை முதல்வர் திருவண்ணாமலை வருகிறாா். வேட்டவலம் ரோடு ரயில்வே கேட்டில் இருந்து, திருவள்ளுவா் சிலை வரை முதல்வர் கலந்து கொள்கிற சாலை வலம் நடைபெறுகிறது. 9 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி வாக்கு கேட்கிறாா்.
எட்டாம் தேதி மாலை, அந்த ரோடு ஷோ வெற்றிபெற திருவண்ணாமலையில் உள்ள அனைவரும் ஆதரவு தர வேண்டும். திமுக வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.