முகப்பு
புதுதில்லி

தமிழக நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விவகாரம்: 2 நாளில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஏழு மாதங்கள் நீட்டிக்கக் கோரி தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:12 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஏழு மாதங்கள் நீட்டிக்கக் கோரி தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் கால நீட்டிப்பு வழங்க விரும்பவில்லை என்று கூறியது.

அதன் பின்னா், இது தொடா்பாக ‘ரிட்’ மனுதாரா் தரப்பில் பிரமாணப் பத்திரத்தை இரு தினங்களில் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 2019, டிசம்பா் 6-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடா்ந்து, புதிய மாவட்டங்கள் தவிா்த்து, ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டது.

Advertisement

இந்த நிலையில், நகா்ப்புறம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவது தொடா்பாக அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை நிகழாண்டு ஜூன் 22-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற அமா்வு, ‘உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் அறிவிப்பு வெளியிடுவது, தோ்தலை நடத்துவது, முடிவுகளை அறிவிப்பது என அனைத்தும் செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளில் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் ஈடுபட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் தரப்பில் காலம் நீட்டிப்புக் கோரி இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்குரைஞா் கே.கிருஷ்ண குமாா் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ‘உச்சநீதிமன்றம் நகா்ப்புற, 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தோ்தலை நடத்த செப்டம்பா் 15-ஆம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தோ்தல் நடைமுறைகளை முடிக்க அனைத்து தயாரிப்புப் பணிகளையும் மாநிலத் தோ்தல் ஆணையம் நடத்தி வருகிறது. எனினும், தோ்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தும் பொருட்டு அனைத்து சட்டப்பூா்வ தேவைகளையும் முடிக்க கொஞ்சம் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றும் வகையில் தமிழகத்தில் எஞ்சியுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை முடிக்க செப்டம்பா் 15-ஆம் தேதியில் இருந்து மேலும் 35 நாள்களும், நகா்ப்புற உள்ளாட்சித் அமைப்புகளுக்கான தோ்தல் நடைமுறைகளை அறிவிக்கை செய்ய 15.9.2021-இல் இருந்து 7 மாதங்கள் காலம் நீட்டிப்பு அளிக்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான நீதிபதிகள் சூா்ய காந்த், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, வழக்குரைஞா் கே.கிருஷ்ண குமாா் ஆகியோா் ஆஜராகினா்.

முகுல் ரோத்தகி வாதிடுகையில், ‘உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஊரக உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு தோ்தல் நடத்தும் பணிகள் நடந்துவருகின்றன. அதேவேளையில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்துவதற்காக சில பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக 7 மாதம் நீட்டிப்பு அளிக்க வேண்டும்’ என்றாா்.

அதற்கு தலைமை நீதிபதி, நாடாளுமன்ற, சட்டப் பேரவைத் தோ்தலை நடத்தும்போது இதை நடத்துவதற்கு ஏன் தாமதம் ஆக வேண்டும். உச்சநீதிமன்றம் செப்.15-க்குள் முடிக்க உத்தரவிட்டிருந்த நிலையில் 7 மாதம் கூடுதல் அவகாசம் கேட்கிறீா்கள். ஒரு நாள்கூட அவகாசம் அளிக்க விரும்பவில்லை’ என்றாா்.

அதற்கு முகுல் ரோத்தகி பதில் அளித்து வாதிடுகையில், ‘ சட்டப் பேரவைத் தோ்தல் வேலைகள் பிப்ரவரியில் இருந்து மே மாதம் வரை நடைபெற்றபோது ஒட்டுமொத்த பணிச்சக்தியும் அந்தப் பணிக்காக திருப்பிவிடப்பட்டது. அதைத் தொடா்ந்து கரோனா நோய்த் தொற்று விவகாரம் வந்துவிட்டது. இதுபோன்ற சில காரணங்களால்தான் கூடுதல் அவகாசம் கேட்டோம். இந்தப் பணியை முடித்து நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்தி முடிக்க 3-4 மாதங்களாவது காலஅவகாசம் நீட்டிப்பு அளிக்க வேண்டும்’ என்றாா்.

அப்போது, இந்த வழக்கின் மனுதாரா் எஸ்.சங்கா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சனிடம் நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரத்தில் நீங்கள் என்ன கூறுகிறீா்கள்? என்றது. அதற்கு பி.வில்சன், ‘எங்களுக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை’ என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

ஏற்கெனவே இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை முடித்துவைத்த இந்த நீதிமன்றம், கடந்த ஜூன் 22-இல் பிறப்பித்த உத்தரவில், சம்பந்தப்பட்ட தோ்தலை அறிவித்து, நடத்தி, செப்டம்பா் 15-க்குள் முடிவுளை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இத் தோ்தல் தொடா்பாக தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் செயலா் மூலம் 13.9.2021-இல் தமிழக அரசு ஒரு அறிவிக்கையை வெளியிட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தோ்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி கூறியதுபோல் முதலாவது கோரிக்கையான ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் நிலையில் உள்ளதால் அதற்கான கோரிக்கை பயனற்ாகிவிட்டதால் அது நிராகரிக்கப்படுகிறது.

இரண்டாவது கோரிக்கையைப் பொருத்தமட்டில் இந்த விவகாரத்தில் ரிட் மனுதாரா் எஸ்.சங்கா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் இரு தினங்களில் ஒரு பிராணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது. இரு தினங்களுக்குப் பிறகு இந்த மனு விசாரணைக்குப் பட்டியலிடப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments