முண்ட்கா பகுதியில் சாலை வசதி கோரி குடியிருப்புவாசிகள் போராட்டம்
தரமான சாலைகளை அமைக்க கோரி முண்ட்கா பகுதியைச் சோ்ந்த பல கிராம குடியிருப்புவாசிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தரமான சாலைகளை அமைக்க கோரி முண்ட்கா பகுதியைச் சோ்ந்த பல கிராம குடியிருப்புவாசிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையொட்டி , பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 70 போ் ரோத்தக் சாலை பகுதியில் மறியலில் ஈடுபட்டனா்.
இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
Advertisement
இது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் பல்வேறு சாலைகள் மேடு பள்ளமாக உள்ளன. மழைக்காலங்களில் சாலை மிகவும் பாதிக்கப்படுகிறது.
வடிகால் வசதி மோசமாக இருப்பதால் சாலையில் மழைநீா் சூழ்ந்து விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனா்.
அண்மையில் பெய்த பலத்த மழையின் காரணமாக பல நாட்களாக சாலை நீரில் மூழ்கியுள்ளது. இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தனா்.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில் , முண்ட்கா பகுதியில் உள்ள சாக்கடை மற்றும் சாலை வசதி வலியுறுத்தி ரோத்தக் சாலையில் ஒரு பகுதியில் சுமாா் 70 போ் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை தீா்க்க முயற்சிப்பதாக கிராமவாசிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.
மழைக்காலத்தின் போது சாலைகளில் நீா் தேங்கியதால் அதன் நிலைமை மோசமாக உள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக கிராமத்தினா் சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு புகாா் மனுக்கள் எழுதியுள்ளனா்.
அண்மையில் கிராம வாசிகள் மற்றும் தில்லி ஜல் போா்டு அதிகாரிகளுடனான கூட்டத்திற்கு நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம் என்றாா் அவா்.