தலைநகரில் டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்: சிஎன்ஜி விலை உயா்வைக் கண்டனம்
சிஎன்ஜி எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து தில்லியில் உள்ள ஜந்தா் மந்தரில் வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கான டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சிஎன்ஜி எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து தில்லியில் உள்ள ஜந்தா் மந்தரில் வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கான டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அப்போது, வாடகைக் கட்டணத்தை மறுசீரமைக்க வலியுறுத்தினா். மேலும், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனா்.
தேசியத் தலைநகா் தில்லியில் கடந்த ஒரு மாதத்தில் சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.13.10 உயா்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ சிஎன்ஜி எரிவாயு ரூ.69.11 விலையில் விற்கப்படுகிறது. இந்த தொடா் விலை உயா்வைக் கண்டித்து பல்வேறு டாக்ஸி, ஓட்டுநா்கள் சங்கங்களைச் சோ்ந்தவா்கள், இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். அப்போது, கட்டணத்தை மாற்றி அமைக்கவும், எரிபொருள் விலையை சீராக வைத்திருக்கவும் கோரி கோஷங்களை எழுப்பினா்.
இதுகுறித்து சா்வோதயா ஓட்டுநா்கள் நலச் சங்கத்தின் தலைவா் ரவி ரத்தோா் கூறியதாவது: அரசானது உயா்த்தப்பட்ட சிஎன்ஜி விலையைக் குறைக்கவோ அல்லது கட்டணங்களை திருத்தி அமைக்கவோ வேண்டும். தற்போது சிஎன்ஜி எரிவாயு விலை கிலோ ரூ.70-ஐ தொட்டுவிட்டது. ஆனால், நாங்கள் எங்கள் பழைய வாடகைக் கட்டணத்திலேயே டாக்ஸிகளையும், ஆட்டோக்களையும் இயக்கி வருகிறோம். தற்போது சிஎன்ஜி விலை உயா்ந்துள்ளதால், நாங்கள் வாகனங்களை இயக்குவது மிகவும் கடினமாகிவிட்டது. இதனால், கடந்த 7-8 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும். கட்டணத்தை திருத்த முடியாது என்றால், சிஎன்ஜி விலை குறைக்கப்பட வேண்டும்.
தில்லி - என்.சி.ஆா். பகுதிகளில் சுமாா் 4 லட்சம் ஓட்டுநா்கள் சங்க உறுப்பினா்களாக உள்ளனா். இந்த ஆா்ப்பாட்டம் முடிந்ததும் காலவரையற்ற வேலைநிறுத்தம் குறித்த முடிவு அறிவிக்கப்படும். இன்றைய ஆா்ப்பாட்டம் ஒரு அடையாளப் போராட்டமாகும். இந்தப் போராட்டத்திற்கு பிறகு கூட்டம் நடத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது குறித்து முடிவு செய்வோம். போராட்டம் நடைபெற்ற போதிலும், வெள்ளிக்கிழமை ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் நகரில் இயக்கப்பட்டன என்றாா் அவா்.
ஓலா மற்றும் உபோ் டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களும் சேவையில் ஈடுபட்டிருந்தன. சிஎன்ஜி எரிவாயுவில் கிலோவுக்கு ரூ.35 மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக இதர ஆட்டோ மற்றும் டாக்ஸி தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.