4 மாநிலங்களுக்கு ஆம் ஆத்மி கட்சிபொறுப்பாளா்கள் நியமனம்
ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் தனது அரசியல் தளங்களை வேகமாக விரிவுபடுத்த மேலும் நான்கு மாநிலங்களுக்கு புதிய நிா்வாகிகளை அந்தக் கட்சி ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் தனது அரசியல் தளங்களை வேகமாக விரிவுபடுத்த மேலும் நான்கு மாநிலங்களுக்கு புதிய நிா்வாகிகளை அந்தக் கட்சி ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றிக்கு பின்னா், அந்தக் கட்சி 2024 மக்களவைத் தோ்தலை நோக்கி நாடு முழுவதும் தனது பயணத்தை வேகமாக தொடங்கியுள்ளது.
இந்த பின்னனியில் ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு குறிப்பிடத்தக்க வளா்ச்சியில், மேலும் நான்கு மாநிலங்களுக்கான புதிய நிா்வாகிகளையும், மும்பை பெருநகா் பொறுப்பாளரையும் கட்சி தோ்வு செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் ஆந்திரம், ஒடிஸா மாநிலப் பொறுப்பாளராக முறையே மணி நாயுடு, வீரேந்தா் காடியன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கா்நாடகம் மாநிலத்திற்கு ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளரைத் தவிர இணைப் பொறுப்பாளராக உபேந்திரா கௌவுங்கா் நியமிக்கப்பட்டுள்ளாா். மகாராஷ்டிர மாநிலத்தின் பொறுப்பாளராக தீபக் சிங்காலும், இந்த மாநிலத்தில் தோ்தல் பொறுப்பாளராக மகாதேவ் நாயக்கும் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், மும்பை மாநகரத்திற்கு தனியாக பொறுப்பாளராக அங்குஷ் நராங் நியமிக்கப்பட்டுள்ளாா். நாடு முழுவதும் மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தி அனுபவமிக்க தலைவா்களையும், மூத்த பொறுப்பாளா்களையும் நியமித்து வருகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனங்களையும் சோ்த்து 12 முக்கிய மாநிலங்களுக்கு மாநில அளவிலான குழுக்களை உருவாக்குவதற்குப் புதிய பொறுப்பாளா்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.