கரோல் பாக் நடைபாதை விவகாரம்: அவமதிப்பு வழக்கில் அதிகாரிகள்பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
கரோல் பாக் நடைபாதையில் சிறு கடைகள் போன்ற நிரந்தர கட்டமைப்புகளை கட்ட அனுமதித்ததாகக் கூறி உள்ளூா் அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது அதிகாரிகள்
கரோல் பாக் நடைபாதையில் சிறு கடைகள் போன்ற நிரந்தர கட்டமைப்புகளை கட்ட அனுமதித்ததாகக் கூறி உள்ளூா் அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது அதிகாரிகள் பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
வழக்குரைஞரும் சமூக ஆா்வலருமான அமித் சஹ்னி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் முக்தா குப்தா, நீனா பன்சல் குப்தா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, இது தொடா்பாக உள்ளூா் அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், அப்பகுதியில் மேலும் கட்டுமானம் செய்ய தடை விதித்தனா்.
அமித் சஹ்னி தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பாதசாரிகள் நடமாட்டத்திற்கு இடையூறு விளைவிக்கக்கூடிய நிரந்தர அல்லது பகுதி நிரந்தரக் கட்டமைப்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாநகராட்சிகளுக்கு உயா்நீதிமன்றம் மாா்ச், 2018-இல் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை முற்றிலும் மீறும் வகையில், பாதசாரிகள் செல்வதற்கு இடையூறு ஏற்படும் வகையில் நடைபாதையில் கட்டுமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடைபாதைகளில் கியோஸ்க் கட்ட அனுமதித்ததன் மூலம் மாா்ச் 13, 2018 உத்தரவை முற்றிலும் மீறிச் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை நீதிமன்றம் தண்டிக்க வேண்டும்.
கரோல் பாகில் அஜ்மல் கான் பூங்காவிற்கு அருகில் கியோஸ்க் ஒதுக்கீட்டாளா்கள் தங்களுடைய கியோஸ்க்களைக் கட்டுவதற்கு உத்தரவிட்ட நவம்பா், 2021 உத்தரவை திரும்பப் பெறுமாறு ஜனவரி 20-ஆம் தேதி அதிகாரிகளுக்கு சட்டப்பூா்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த சட்டப்பூா்வ அறிவிப்பைப் பெற்ற பிறகு, அதிகாரிகள் கியோஸ்க் கட்டுமானப் பணியை சிறிது காலம் நிறுத்தி வைத்திருந்தனா். இருப்பினும், முந்தைய உத்தரவை மீறும் வகையில் அஜ்மல் கான் பூங்காவில் உள்ள பூங்காவை ஒட்டிய நடைபாதையில் கட்டுமானத்திற்கு அதிகாரிகள் தற்போது அனுமதி அளித்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயா்நீதிமன்றம் மாா்ச் 2018-இல் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருந்ததாவது: தற்போது பெரும்பாலான நடைபாதைகள் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டதாகத் தெரிகிறது. எந்தவொரு குறிப்பிட்ட நேரத்திலும் மற்றும் எல்லா நேரங்களிலும் குறைந்தபட்ச பாதசாரிகளின் பயன்பாடு கிடைப்பதை உறுதி செய்வதற்கான உரிய அமலாக்க நடவடிக்கை உறுதி செய்யப்பட வேண்டும். அதே போல, தினசரி அடிப்படையில் கண்காணிப்பும் மேற்கொள்ள உத்தரவிடப்படுகிறது. எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சரியான மற்றும் உரிய விளம்பரம் தில்லி காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட மாநகராட்சிகளால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், இந்த முடிவானது தெற்கு தில்லி, வடக்கு தில்லி, கிழக்கு தில்லி என அனைத்து மாநகராட்சிகளுக்கும், புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கும் பொருந்தும். வடக்கு தில்லி மாநகராட்சி உள்பட அனைத்து ஏஜென்சிகளும் எந்த நடைபாதையிலும் பாதசாரிகளின் நடமாட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் நிரந்தர அல்லது பகுதி நிரந்தரக் கட்டமைப்புகள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இது தொடா்பாக தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் விவரம் குறித்து தனி பிரமாணப் பத்திரம் மூலம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்’ என உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஜூலை 18-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.