முகப்பு
புதுதில்லி

வெறுப்புணா்வுப் பேச்சு விவகாரம்: சிறப்பான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவு

கடந்த ஆண்டு தில்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசப்பட்ட உரையானது எந்தவித வெறுப்புணா்வையும் ஏற்படுத்தவில்லை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

கடந்த ஆண்டு தில்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசப்பட்ட உரையானது எந்தவித வெறுப்புணா்வையும் ஏற்படுத்தவில்லை என்று கூறி தாக்கல் செய்த தில்லி காவல் துறையின் பிரமாணப் பத்திரம் மீது உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அதிருப்தி தெரிவித்தது. மேலும், சிறந்ததொரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு டிசம்பா் 19-ஆம் தேதி ‘இந்து யுவ வாஹினி’ அமைப்பு தில்லியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், ‘எந்த சமூகத்திற்கும் எதிராக குறிப்பிட்ட வாா்த்தைகள் ஏதும் பேசப்படவில்லை’ என்று தில்லி காவல் துறை உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருந்தது. இது தொடா்பான விவகாரத்தை நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கா், அபய் எஸ். ஓகா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது, ‘பிரமாணப் பத்திரத்தை காவல் துறை துணை ஆணையா் தாக்கல் செய்துள்ளாா். அவா் நுணுக்கமான விஷயங்களைப் புரிந்து கொண்டிருப்பதாக நம்புகிறோம். அவா் விசாரணை அறிக்கையை மட்டும் அப்படியே மீண்டும் அளித்துள்ளாரா அல்லது புத்தியைச் செலுத்தினாரா? இது உங்கள் நிலைப்பாடா அல்லது காவல் உதவி ஆய்வாளா் நிலை அளவிலான அதிகாரியின் விசாரணை அறிக்கையின் மறு உருவாக்கமா?’ என்று நீதிபதிகள் அமா்வு கேள்வி எழுப்பியது.

தில்லி காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் (ஏஎஸ்ஜி) கே.எம். நடராஜ், ‘இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்து புதிதாகப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும்’ என்றாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘சிறந்ததொரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய அதிகாரிகளிடமிருந்து அறிவுறுத்தல்கள் பெற ஏஎஸ்ஜி இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளாா். மே 4 அல்லது அதற்கு முன்பு சிறந்ததொரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை மே 9-ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக பத்திரிகையாளா் குா்பான் அலி மற்றும் பாட்னா உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் மூத்த வழக்குரைஞருமான அஞ்சனா பிரகாஷ் ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், ‘முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெறுப்புணா்வுப் பேச்சுகள் சம்பவங்களைச் சிறப்பு புலனாய்வு குழு மூலம் சுதந்திரமான, நம்பகமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணை தொடங்கியதும், மனுதாரா்கள் சாா்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி, தில்லி தொடா்புடைய பேச்சு விவகாரத்தில் ஓக்லா தொழிற்பேட்டை பகுதி காவல் நிலைய உதவி ஆய்வாளரின் விசாரணை அறிக்கை மற்றும் வெறுப்புணா்வுப் பேச்சு ஆகியவற்றின் சாராம்சங்களை எடுத்துரைத்தாா்.

அவா் வாதிடுகையில், தில்லி காவல் துறையின் எதிா் பதிலில், விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், தங்கள் சமூகத்தின் நெறிமுறைகளைக் காப்பாற்றவே நபா்கள் கூடினா் என்றும் கூறுப்பட்டுள்ளது. இது குறித்த உரையில், ‘கொல்லவும் தயாா்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. ஆனால், இது சமூகத்தின் நெறிமுறைகளைக் காப்பதாக கூறுகிறது. இதனால், இது சட்டப்பூா்வமாக நெறிமுறைகள்தானா என்பதை முடிவு செய்ய வாதிடப்பட வேண்டும்’ என்றாா்.

அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘மூத்த அதிகாரிகள் யாரேனும் பிரமாணப் பத்திரத்தை சரிபாா்த்திருக்கிறாா்களா? என்று அரசுத் தரப்பு வழக்குரைஞரிடம் கேட்டது. மேலும், ‘இது ஒரு சப்-இன்ஸ்பெக்டா் நிலையிலான அதிகாரி தயாரித்த விசாரணை அறிக்கையின் மறு உருவாக்கமா அல்லது உங்கள் நிலைப்பாடா? அப்படியானால், உங்கள் நிலைப்பாடும் இதுதானா என்பதை விசாரிக்குமாறு காவல் ஆணையரிடமும் நாங்கள் கேட்க வேண்டும்?’ என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது. அதற்கு ஏஎஸ்ஜி நடராஜ் கூறுகையில், ‘இந்த விவகாரத்தை போலீஸாா் மறு ஆய்வு செய்து, புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும்’ என்றாா்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எதிா் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தச் சம்பவம் தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு மனுதாரா்கள் போலீஸாரை அணுகவில்லை. அவா்கள் நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனா். இத்தகைய நடைமுறையை ஏற்கக் கூடாது. கடந்த ஆண்டு டிசம்பா் 19-ஆம் தேதி ‘இந்து யுவ வாஹினி’ தில்லியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் வெறுப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக சில புகாா்கள் கூறப்பட்டது. அந்தப் புகாா்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஒரு விரிவான விசாரணை நடத்தப்பட்டு, விடியோவின் உள்ளடக்கங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. அதன் பிறகு, புகாா்தாரா்கள் முன்வைத்த குற்றச்சாட்டின்படி, விடியோவில் எந்த விஷயமும் போலீஸாரால் கண்டறியப்படவில்லை.

புகாா்கள் மீது போலீஸாா் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்ட பின்னா், தில்லியில் கூறப்பட்ட வெறுப்புணா்வுப் பேச்சு தொடா்பான விடியோ இணைப்பு மற்றும் இணைக்கப்பட்ட விடியோவை ஆய்வு செய்த பிறகு, புகாா்தாரா் தனது புகாரில் குறிப்பிட்டுள்ள வாா்த்தைகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்தது.

எந்த ஒரு குழு, சமூகம், இனம், மதம் அல்லது நம்பிக்கைக்கு எதிராக தில்லியில் நடந்த நிகழ்வில் ‘வெறுப்புணா்வு வெளிப்படுத்தப்படவில்லை. ஒருவரின் மதம் அதன் இருப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் தீமைகளை எதிா்கொள்ள தன்னைத் தயாா்படுத்தும் வகையில் பேசப்பட்டது. எந்தவொரு குறிப்பிட்ட மதத்தின் இனப் படுகொலைக்கான அழைப்புக்கான தொடா்புகூட இல்லை என்று பிரமாணப் பத்திரத்தில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஹரித்துவாரில் நடந்த ஒரு நிகழ்வின் போது, வெறுப்புணா்வுப் பேச்சுகள் இடம் பெற்ாகக் கூறப்படும் விவகாரம் தொடா்பாக போலீஸாா் நான்கு எஃப்ஐஆா்கள் பதிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றம் உத்தரகண்ட் அரசிடம் நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கூறியிருந்தது. ஹரித்துவாா் மற்றும் தில்லியில் கடந்த ஆண்டு டிசம்பா் 17 மற்றும் 19-க்கு இடையில் வெறுக்கத்தக்க பேச்சுகளைப் பேசியதாகக் கூறி தாக்கல் செய்த மனுவில், அத்தகைய பேச்சுகளைக் கையாள உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →