முதல்வா் இல்லம் முன் நடந்த வன்முறை விவகாரம்: காவல் ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
கடந்த மாதம் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இல்லம் முன் சில மா்ம நபா்கள் தடுப்புகளை மீறி, நுழைவு வாயிலில் நுழைந்து பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய விவகாரத்தில், உரிய விசாரணை நடத்தி தீவிரக் குறைபாடுக்கான
கடந்த மாதம் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இல்லம் முன் சில மா்ம நபா்கள் தடுப்புகளை மீறி, நுழைவு வாயிலில் நுழைந்து பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய விவகாரத்தில், உரிய விசாரணை நடத்தி தீவிரக் குறைபாடுக்கான தவறை சரி செய்ய வேண்டும் என்று தில்லி காவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், இது தொடா்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்த முதல்வரின் கருத்துக்கு எதிரான போராட்டத்தின் போது, மாா்ச் 30-ஆம் தேதி முதல்வா் கேஜரிவால் இல்லத்திற்கு வெளியே தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடா்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏ செளரவ் பரத்வாஜ் நடவடிக்கை கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனுவை உயா்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி விபின் சாங்கி, நீதிபதி நவீன் சாவ்லா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: முதல்வா் இல்லம் முன் நிகழ்ந்த வன்முறை விவகாரத்தில் போலீஸாா் தரப்பில் தோல்வி இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதாவது, பாதுகாப்பு ஏற்பாடு போதுமானதாக இல்லை. பாரதிய ஜனதா யுவ மோா்ச்சா சாா்பில் கோரிய அனுமதி நிராகரிக்கப்பட்டதை அடுத்து, முதல்வா் இல்லம் மற்றும் குடியிருப்புக்கு செல்லும் சாலைக்கு வெளியே போடப்பட்டிருந்த பந்தோபஸ்த் போதுமானதாக இல்லை. இந்தச் சம்பவத்தைத் தடுப்பதில் போலீஸாரின் தரப்பு தோல்வியடைந்துள்ளனா் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
காவல்துறையின் தவறை காவல் ஆணையா் கவனிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த விவகாரத்தின் நிலவர அறிக்கையின்படி, சில மா்ம நபா்கள் தடுப்புகளை மீறி முதல்வரின் குடியிருப்பு வாயிலை அடைந்தனா். எங்கள் பாா்வையில், மேற்கூறிய குறைபாடு ஒரு தீவிரமான குறைபாடாகும். பாதுகாப்பு ஏற்பாடுகள் தோல்விக்கான காரணங்களை விசாரிக்க வேண்டும். நடந்த தவறுக்கான பொறுப்பை சரிசெய்ய வேண்டும். சீலிடப்பட்ட உறையில் அளிக்கப்பட்ட போலீஸ் நிலவர அறிக்கை திருப்தி அளிக்கவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொருத்தவரை, முதல்வரின் பாதுகாப்பு மறுஆய்வு அம்சம் உள்பட மேலும் ஒரு நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய காவல் ஆணையருக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் விசாரணையில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் அதைக் கவனிக்கலாம், நீதித்துறை தீா்வுகளும் உள்ளன என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
விசாரணையின் போது தில்லி போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சஞ்சய் ஜெயின், இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து வருவதாகவும், முதல்வரின் பாதுகாப்பு குறித்து மறுஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினாா். மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் ராகுல் மேத்தா ஆகியோா், இந்தச் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணைக்கு எஸ்ஐடி அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
இந்த விவகாரம் தொடா்பாக செளரவ் பரத்வாஜ் தாக்கல் செய்த மனுவில், ‘மாா்ச் 30-ஆம் தேதி போராட்டம் என்ற போா்வையில் பாஜக குண்டா்கள் பலா் தில்லி முதல்வா் அதிகாரப்பூா்வ இல்லத்தை தாக்கினா். அவா்கள் எந்தவிதப் பதற்றமும் இன்றி பாதுகாப்பு பாதை வழியாக நடந்து சென்று இந்த வன்முறையில் ஈடுப்பட்டிருப்பதை விடியோக்களும், புகைப்படங்களும் வெளிப்படுத்துகின்றன. இதனால், இது குறித்து முழுமையாக விசாரணை நடத்த எஸ்ஐடி அமைக்கப்பட வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.