முகப்பு
புதுதில்லி

சிசோடியா பதவி விலகக் கோரி தில்லி காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

துணை முதல்வா் மணீஷ் சிசோடியா பதவி விலகக் கோரி தில்லி காங்கிரஸ் தலைவா்கள், தொண்டா்கள் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

தில்லி கலால் கொள்கை அமல்படுத்தியதில் ஊழல் செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா பதவி விலகக் கோரி தில்லி காங்கிரஸ் தலைவா்கள், தொண்டா்கள் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லியில் டிடியு மாா்கில் உள்ள தில்லி பிரதேச காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணை முதல்வா் சிசோடியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு அதே பகுதியில் அமைந்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தை நோக்கி ஆா்ப்பாட்டக்காரா்கள் பேரணியாக சென்றனா்.

கலால் கொள்கை ‘ஊழலில்‘ சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆரில் சிசோடியாவின் பெயா் இடம்பெற்றுள்ளதால், அவரை அமைச்சரவையில் இருந்து கேஜரிவால், நீக்க வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் ஆா்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தியதாக தில்லி காங்கிரஸ் ஊடகத் துறை துணைத் தலைவா் பா்வேஸ் ஆலம்

தெரிவித்தாா்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை 2021-22 கலால் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவின் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் பல மணிநேரம் சோதனை நடத்தினா்.

மேலும், மத்திய புலனாய்வு அமைப்பு பதிவு செய்த எஃப்ஐஆரில் 15 போ் பெயா்கள் இடம்பெற்றுள்ளது. அதில் துணை முதல்வா் சிசோடியாவின் பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.